புதன், 12 பிப்ரவரி, 2025

செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு - அதிமுக முன்னாள் அமைச்சர்

 Hindu Tamil : ஈரோடு: கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது.
முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கே.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.



இந்த விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாத நிலையில், எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இப்பிரச்சினை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இன்று (பிப்.11) காலை தைப்பூசத்தை ஒட்டி பச்சைமலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்ட செங்கோட்டையன், அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின், கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டுக்குச் சென்று ஓய்வு எடுத்துள்ளார். காலையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று இரவு 7 மணியளவில் ஒரு ஆய்வாளர் மற்றும் 3 போலீஸார் அடங்கிய குழுவினர், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுகவினரிடையே விசாரித்தபோது, ‘தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று செங்கோட்டையன் காவல் துறையிடம் கோரவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் அவர்களாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபட வீட்டுக்கு வந்துள்ளனர்’ என்றனர்.

கருத்துகள் இல்லை: