Hindu Tamil : திருவண்ணாமலை: “நீங்கள் உடலில் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். பணக்கொழுப்பு கேள்விப்பட்டுள்ளீர்களா?
எப்படி ஒருவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்று கூறுவோமோ, அதுபோல பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். எனவே, அதைப்பற்றி பேசி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தச் சந்திப்பு குறித்து ஊடக செய்திகள் மூலம் பார்த்து தெரிந்துகொண்டேன். தேர்தல் வியூக வகுப்புகளில் எல்லாம் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை.
இந்த நாட்டை ஆட்சி செய்த எங்கள் முன்னோர்கள் எல்லாம் இதுபோன்ற வியூக வகுப்பெல்லாம் செய்யவில்லை. முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா போன்றவர்கள் எல்லாம் இதுபோல தேர்தல் வியூக வகுப்பாளர்களை வைத்துக்கொள்ளவில்லை. என் நாடு, என் நிலம், எம் மக்கள், என் மண், என் மலை, இவைகளை எப்படி கையாண்டால் சிறப்பாக இருக்கும் என்று தெரியாத நான், இந்த வேலைக்கு ஏன் வரவேண்டும்?
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் யாரை நிறுத்தினால் வெல்ல முடியும்? இதுகூட தெரியாமல் நான் எப்படி அரசியல் செய்வது? எனக்கு நிறைய மூளை இருக்கிறது. காசுதான் இல்லை. அதனால், எனக்கு தேர்தல் வியூக வகுப்பெல்லாம் தேவையில்லை. எத்தனை வியூகத்தை வகுத்தாலும் என்ன செய்வது? கத்தரிக்காய் என்று தாளில் எழுதுவதால் பயனில்லை. நிலத்தில் இறங்கி, விதையிட்டு, தண்ணீர் ஊற்றி விளைய வைக்க வேண்டும். அப்போதுதான் கத்தரிக்காய் வரும்.
மேஜையில் உட்கார்ந்துகொண்டு, கத்தரிக்காய், சுரக்காய் என்று எழுதி பயனில்லை. இப்போது ஒரு சிலருக்கு குறிப்பிட்ட காலமாக இந்த நோய் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தில் என்ன தெரியும்? தமிழகத்தில் எத்தனை ஆறு, குளம், ஏரி, எத்தனை சமூக மக்கள் இருக்கிறார்கள்? அவர்களுடைய பிரச்சினைகள் என்னவென்று அவருக்கு எப்படி தெரியும்?” என்றார்.
அப்போது, அவரைத்தானே அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கின்றனர், என்ற கேள்விக்கு, “நீங்கள் உடலில் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். பணக்கொழுப்பு கேள்விப்பட்டுள்ளீர்களா? எப்படி ஒருவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்று கூறுவோமோ, அதுபோல பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். எனவே, அதைப்பற்றி பேசி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக