திங்கள், 10 பிப்ரவரி, 2025

டெல்லி தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம்... ஆர்.எஸ்.பாரதி அதிரடி

 மின்னம்பலம் -  Selvam : “எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே டெல்லி சட்டமன்ற தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம்” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்ரவரி 9) தெரிவித்துள்ளார். Bharathi says Delhi Election
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “சில மாநிலங்கள் அவர்கள் வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “மத்திய அரசுக்கு தான் அற்ப சிந்தனை. தமிழ்நாடு அரசு 6.28 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரிப்பகிர்வு அளிக்கிறது. ஆனால், 56 ஆயிரம் கோடி மட்டுமே தமிழகத்திற்கு மத்திய அரசு திருப்பி அளிக்கிறது.



இது எந்த வகையில் நியாயாம்? அதேநேரத்தில் உத்தரபிரதேசம், பிகார், குஜராத் மாநிலங்களுக்கு அவர்கள் கேட்காமலேயே அதிகளவில் நிதிப்பகிர்வு அளிக்கிறார்கள். ஏன் இந்த ஓரவஞ்சனை.

நானும் ஒரு தமிழச்சி தான் என்று சொல்கிற நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார்? தமிழ்நாடு வளர்ந்து வருகிறது என்ற பொறாமையின் காரணமாக தான் நிதி ஒதுக்க மறுக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து, “டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையின்மை தான் காரணமா?” என்ற கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி,

“ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றபோது, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ‘பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்ட காரணத்தினால் தான், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் தயவில் தான் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 22 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. 16 இடங்களில் காங்கிரஸ் ஓட்டுக்களை பிரித்ததால், ஆம் ஆத்மி தோல்வி அடைந்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்தால் ஆட்சியமைத்திருக்கலாம். ஆகவே, எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இருக்க வேண்டும். இதுதான் டெல்லி தேர்தலில் இருந்து எதிர்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்” என்றார்

கருத்துகள் இல்லை: