மின்னம்பலம் -Selvam : “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் நோக்கம் இல்லை”: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்
பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரசியல் நோக்கத்திற்காக கொலை செய்யப்படவில்லை என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஜூலை 6) தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் ராய் ரத்தோர்,
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். அரசியல் நோக்கத்திற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு, வேறு கும்பலுடன் அவருக்கு தகராறு இருந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைகள் முடிந்த பிறகு தான் தகவல் தெரிவிக்கப்படும்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள புண்ணை பாலு மீது 4 வழக்குகள், மணிவண்ணன் மீது ஒரு வழக்கு, திருமலை 7 வழக்குகள், திருவேங்கடம் 4 வழக்குகள் உள்ளது. அருள் மீது மட்டும் வழக்குகள் இல்லை. கைதானவர்கள் யாரும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இல்லை. குற்றவாளிகள் சரண்டர் ஆகவில்லை. தனிப்படை போலீசார் தான் அவர்களை கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கை ஐஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால், அவர் மீது த்ரெட் எதுவும் வரவில்லை.
கடந்த மார்ச் மாதம் தேர்தல் நன்னடத்தை விதிகள் இருந்தபோது தனது துப்பாக்கியை காவல்துறையிடம் ஆம்ஸ்ட்ராங் ஒப்படைத்தார். பின்னர் தேர்தல் முடிந்ததும் ஜூன் 13-ஆம் தேதி துப்பாக்கியை திரும்பி வாங்கிவிட்டார். அவரிடம் துப்பாக்கி லைசன்ஸ் இருக்கிறது. 31.12.2027 வரை ரினிவல் செய்திருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் மீது ஏழு வழக்குகள் இருந்தது. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் மீது எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக