வெள்ளி, 5 ஜூலை, 2024

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சொல்வது..

மின்னம்பலம்  - Selvam :  கர்நாடகா மாநிலத்தில் பானிபூரி கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார்,

“பானிபூரி சாப்பிடுவதால் கேன்சர் வருகிறது என்று கர்நாடகா மாநிலத்தில் பானிபூரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் சோதனை நடத்தி வருகிறோம். இந்த சோதனையின் போது கலரிங் ஏஜெண்ட் பயன்படுத்துகிறார்களா? பானிபூரியில் கேன்சர் வரக்கூடிய கெமிக்கல் இருக்கிறதா? என்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதிரிகளின் ஆய்வு முடிவுகளில் தான் தமிழ்நாட்டில் விற்கப்படும் பானிபூரியில் கேன்சர் வரக்கூடிய காரணிகள் இருக்கிறதா என்பது தெரியவரும்.

நிறைய பானிபூரி கடைகளில் கைகளில் கிளவுஸ் அணியாமல் பானிபூரியை தண்ணீரில் மூழ்கி எடுத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்கள். அதுபோன்ற கடைகளில் பொதுமக்கள் யாரும் சாப்பிட வேண்டாம்.

சென்னையில் சுகாதாரமான முறையில் பானிபூரி விற்பனை செய்யக்கூடிய நிறைய கடைகள் இருக்கிறது. அதுபோன்ற கடைகளில் நாம் தாராளமாக பானிபூரி வாங்கி சாப்பிடலாம். பானிபூரி தயார் செய்யும் இடங்களிலும் சோதனை நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பழனிமலை வீதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜோட்டூ பானிபூரி கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் இன்று (ஜூலை 4) உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானிபூரி, உருளைக்கிழங்கு, நிறமூட்டிகளை பினாயில் ஊற்றி அழித்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவான பானிபூரியில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இருப்பதாக வரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

கருத்துகள் இல்லை: