தலைமுறை வழியாய் 95 வருடங்கள்,
நெல்லை மாவட்டத்தின் அம்பை பகுதியின் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.டி.சி. கம்பெனிக்கு இரவுபகல் பாராது விசுவாசமாய் உழைத்தவர்கள். அப்படிப்பட்ட மக்கள் அடுத்த வேளை உணவுக்கு,
அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு என்ன செய்வார்கள் என்ற நன்றி உணர்வு இம்மியளவு கூட இல்லாமல் கடுமையாக நடந்து கொண்ட கார்ப்பரேட் கம்பெனி குத்தகை முடிவதற்கு இன்னும் நான்கு வருடங்கள் இருந்தபோதும் ஜூன் 17 முதல் கம்பெனி மூடப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு வேலையில்லை. ஆரம்பத்தில் 25 சதவிகிதம் ஓய்வூதியத் தொகை. வீட்டைக் காலி செய்து சாவியை ஒப்படைத்தால்தான் மீதமுள்ள தொகை என்று ஐம்புலன்களையும் மூடிக்கொண்டு அறிவித்துவிட்டது. பிரபஞ்சத்தில் நடந்திராத கொடுமை.
அதே சமயம் கார்ப்பரேட்டின் ‘வெளியேறு’ என்ற தகவலையறிந்த அரசும் உரிய நடவடிக்கையிலிறங்கியது. தாமதிக்காமல் இம்மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் அத்தனை குடும்பங்களுக்கும் உதவும் வகையில் இருப்பதற்கு வீடு, நிலம், வேலை, கல்வியைத் தொடர்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கிற வகையில் அவர்களின் விருப்பத்தைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மூலம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்து நிவாரணப் பணிகளை விரைவு படுத்தியிருக்கிறார். முதல்வரின் நடவடிக்கைகள் அம்மக்களின் நம்பிக்கையை வலுவாக்கியிருக்கிறது.
ஆனாலும் தற்போதைய சூழலில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுகிற வகையில் தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதுவே எங்களின் குடும்பங்களை மேம்படுத்தும் என்று கோரிக்கை வைத்ததுடன், முதல்வர் தங்களுக்கான இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இன்னமும் அம்மக்களின் மனதில் நிலை கொண்டிருப்பதை அறியமுடிந்தது.
வனத்துறையினர் மூலம் விநியோகிக்கப்பட்ட அந்த விண்ணப்பப் படிவத்தில், தேயிலை பறிப்பவரா, மேற்பார்வையாளரா அல்லது மற்ற வேலைபார்ப்பவரா, அவர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகள், எந்தப் பஞ்சாயத்தில் வசிப்பவர், குடும்ப அட்டை எண், எந்த வருடத்தில் தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தார், குழந்தைகளின் எண்ணிக்கை கல்வியின் நிலை, விருப்ப ஓய்வூதிய திட்டத்தில் கையெழுத்திட்டவரா, அரசிடமிருந்து எந்த விதமான உதவியை எதிர்பார்க்கிறார், நிலமாக உதவியா, அரசு ஒதுக்கீடு செய்யும் வீடா? இங்கிருந்து வெளியே சென்ற பிறகு எந்த ஊரில் அல்லது கிராமத்தில் குடியேற விரும்புகிறார்கள் உட்பட அனைத்து விபரங்களும் பூர்த்தி செய்து விரைவாகக் கேட்கப்பட்டுள்ளது. அம்மக்களின் மறு வாழ்வே முக்கியம் என்றும் அதிகாரிகளின் தரப்பிலும் சொல்லப்படுகிறது.
நாம் மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்ததில் அங்கு நடப்பவைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மன நிலைபற்றியும் நுணுக்கமாகவே கேட்டறிந்ததில், தொழிலாள மக்களின் மனதில் இனம் புரியாத அச்சமும் பதட்டமுமிருப்பதைக் காண முடிந்தது. கம்பெனியின் திட்டவட்ட அறிவிப்பின்படி பல தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களைக் காலி செய்து கொண்டிருந்தபோது கூட அவர்களே அறியாமல் கண்ணீர் பொத்துக் கொண்டு கிளம்பியது நெருடலாக இருந்தது.
“எதிர்ப்பாக்காத அறிவிப்ப சொல்லிருச்சி கம்பெனி. பித்துப் புடிச்சுப் போயி நிக்கோம்யா. இத்தன வருஷமா இதே வேலையச் செஞ்சு பழக்கப்பட்ட நாங்க வேற தொழில செய்ய முடியுமா? மனசும் ஒடம்பும் ஒத்துழைக்குமா தெரியல. ஆனைமுடி, வால்பாறை எஸ்டேட்டுக்கு வாங்கன்றாக. அங்க அத்தன சுலபமா குடி பெயரமுடியாதுய்யா. அதனால தாம் இத அரசு ஏத்து நடத்துனா எங்களுக்கு உசுரு கெடச்சமாதிரின்றோம்யா...” என்றார் தளர்ந்த குரலில் குதிரைவெட்டி எஸ்டேட் தொழிலாளியான துரைப்பாண்டியன்.
மாஞ்சோலையின் சமுத்திரக்கனியோ பதறுகிறார். “நா பொறந்தது வளர்ந்தது வால்பாறை எஸ்டேட்ல தான். அங்க கல்யாணம் முடிஞ்சி 23 வயசுல இங்க வந்தேம்யா. 24 வருஷமா இங்க வேல பாத்து வாரேன். எங்க குடும்பத்து பூர்வீகம் கடையநல்லூர். வால்பாறையிலயும் இங்கயும் ஒரே மேனேஜ்மெண்ட் தான். காலி பண்ணுங்கன்னு கம்பெனி திடீர்னு சொன்னதுனால இனிமே என்ன பண்றதுன்னு தவிப்பில இருக்கோம். கம்பெனி கூட எங்க கிராஜூட்டி கணக்க சரியா சொல்லல. இனிமே எங்க புள்ளைங்க வாழ்வாதாரம் என்னாகுமோன்னு தெரியல. ஏற்கனவே நடக்குற தேயில தொழில்தான. அரசாங்கம் என்னயப் போல தொழிலாளிகளுக்கு எது அவசியம்னு நல்ல முடிவு எடுக்கும்ற நம்பிக்கை மட்டும் எங்கள விட்டுப் போகல..” என்றார் திடமாக.
ஏற்றுக் கொள்ள சிரமப்படுகிற புதிய சூழலை உருவாக்குவதை விட பழகிப் போன வாழ்வாதாரத்தை சீர் படுத்துவதே மேல், என்பதே மாஞ்சோலையின் மனவோட்டமாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக