ஞாயிறு, 30 ஜூன், 2024

மிஷல் ஒபாமா US அதிபர் தேர்தலில் - ஜோ பைடனுக்கு பதில் இவர் தேர்தல் வேட்பாளராக கூடும்!

 தினமலர் :  வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பொது விவாத நிகழ்ச்சியில், அதிபர் ஜோ பைடன், 81, சொதப்பினார். இதனால், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, அவருக்கு பதிலாக மிச்சைல் ஒபாமாவை நிறுத்த வேண்டும் என்ற வாதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி நடந்தது.

இதில் இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் வாதங்கள் வலுவிழந்து இருந்தது என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, டிரம்பின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஜோ பைடன் தடுமாறினார். இது, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், அதிபர் வேட்பாளராக ஜோ பைடனை மாற்றுவது தொடர்பாக பேச்சு எழுந்து உள்ளது.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி, மிச்சைலை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.



மாலைமலர் : “அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர்.

தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில்

அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.

மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.

ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் வழங்கறிஞர் டெட் க்ரூஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: