புதன், 3 ஜூலை, 2024

ஹத்ராஸ் மருத்துவமனை வாசல் முழுக்க மனித உடல்கள்.. அழுகுரல்கள்.. 122 பேர் உயிரிழந்துள்ளனர்

 tamil.oneindia.com : ஹத்ராஸ் மருத்துவமனை வாசல் முழுக்க மனித உடல்கள்.. எங்கும் அழுகுரல்கள்.. இதயத்தை நொறுக்கும் காட்சிகள்.: 122 பேர் உயிரிழந்துள்ளனர்
ஹத்ராஸ் கூட்டநெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு வெளியே தரையில் கிடக்கின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
மருத்துவமனை முழுவதும் மரண ஓலமும், அழுகுரலும், காப்பாற்றுங்கள், எப்படியாவது காப்பாற்றுங்கள் என்ற சத்தமும் கேட்டபடியே இறந்தது காண்போரின் இதயத்தையே நொறுங்க வைத்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபாவின் (Bole Baba) நிகழ்ச்சி இன்று நடந்தது.



நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் மருத்துவமனையின் வெளியே நேற்று ( செவ்வாய்கிழமையன்று) உடல்களால் நிரம்பி வழிந்தது. கால் வைக்கும் இடமெல்லாம் மனித உடல்கள் காணப்பட்டன.

ஆன்மிக பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் உடல்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ்கள், டிரக்குகள் மற்றும் கார்களில் கொண்டு வரப்பட்டு கொண்டே இருந்தன.

காண்போரின் இதயத்தை நொறுங்க வைக்கும் காட்சிகள் சிக்கந்தரா ராவ் மருத்துவமனையின் வெளியே எடுக்கப்பட்டிருந்தது.

இந்த காட்சிகளை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் ஒரு வாகனத்தில ஐந்து அல்லது ஆறு உடல்களுக்கு மத்தியில் அழுதுகொண்டே உட்கார்ந்து வந்தார்.

அத்துடன், வாகனத்தில் இருந்து தனது மகளின் உடலை வெளியே எடுக்க உதவுமாறு மக்களை கண்ணீர் மல்க வலியுறுத்தினார்.

ஒரு ஆணும் பெண்ணும் வெவ்வேறு வாகனத்தில் உயிரற்ற நிலையில் கிடப்பதாக வீடியோவில் இருந்தது. ஹத்ராஸ் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட துயரம்..

காயமடைந்தவர்களில் பலர் சிக்கந்தரா ராவ் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலின் அருகே கவலையுடன் உறவினர்களால் சூழ்ந்து இருந்ததை காண முடிந்தது.

நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். நேரம் செல்ல செல்ல, இறப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது,

பிணவறைக்கு வெளியே மக்கள் கூட்டம் அலைமோதியது. ‘ஹத்ராஸ் மாவட்டத்தின் மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, 100 பேர், பெரும்பாலும் பெண்கள், நெரிசலில் இறந்துள்ளனர்.

பலர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு வெளியே ஆவேசத்துடன் பேசிய இளைஞர் ஒருவர், “கிட்டத்தட்ட 100-200 பேர் பலியாகி உள்ளனர், மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருக்கிறார்.

ஆக்ஸிஜன் வசதி இல்லை. சிலர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். ஆனால் சரியான சிகிச்சை வசதிகள் இல்லை ” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

போலே பாபாவின் ‘சத்சங்கம்’ முடிந்ததும். மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறும் போது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்த சாட்சியான சகுந்தலா தேவி பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறும் போது, “வெளியில், ஒரு வடிகால் மீது உயரமாக சாலை அமைக்கப்பட்டிருந்தது.

அதில் ஏறும் போது, மக்கள் ஒருவர் மீது ஒருவர் சரிந்து விழுந்தனர்,” என்று விபத்துக்கான காரணம் குறித்து சகுந்தலா தேவி என்ற பெண் கூறினார்.

சிக்கந்தரா ராவ் காவல் நிலைய உயர் அதிகாரியும் கூட்ட நெரிசல் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் பிரதேச ஆணையர் அடங்கிய குழுவை உத்தரப்பிரதேச மாநில அரசு அமைத்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், இது ஒரு தனிப்பட்ட விழா, இதற்கு துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் அனுமதி அளித்திருக்கிறார்.

உள்ளாட்சி நிர்வாகம் மைதானத்திற்கு வெளியே பாதுகாப்பை வழங்கியது. உள் ஏற்பாட்டை ஏற்பாட்டாளர்கள் கவனித்திருக்க வேண்டும்” என அவர் கூறினார்.

இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, விபத்து நடந்த இடத்துக்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உடனடியாக மருத்துவமனைகளுக்குஅழைத்துச் செல்லவும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இதனிடையே போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: