ஞாயிறு, 30 ஜூன், 2024

மதுவில் கிக் இல்லை... துரைமுருகனின் பேச்சு தமிழகத்துக்கு தலைகுனிவு : பிரேமலதா

 மின்னம்பலம் -Kavi :   அரசு விற்கும் மதுவில் கிக் இல்லை என்று  சீனியர் அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியிருப்பது தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
இன்று (ஜூன் 30) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரேமலதா கோவை சென்றுள்ளார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டபேரவையில் மூத்த அமைச்சர், முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர், மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி மக்கள் செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். முதல்வர் முன்னியிலையில் சொல்லியிருக்கிறார்.


மிக மோசமான ஒரு பதிவை சட்டப்பேரவையில் பதிய வைத்திருக்கிறார். இதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம்.

அவர் இப்படி சொல்வதன் மூலம், கள்ளக்குறிச்சியில் 69 பேர் பலியானதற்கு காரணம் அரசு தான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை என்று சொல்லும் போது, அந்த அளவுத் தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு ஏன் நடத்துகிறது.

கள்ளச்சாராயத்தை நோக்கி மக்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக்கை நடத்துகிறோம் என்கிறார்கள். டாஸ்மாக் மூலம் 45 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்.

இப்போது கள்ளச்சாராயத்தை நோக்கி செல்ல வைப்பது யார் என்பது தெளிவாக தெரிகிறது.
மக்களாய் பார்த்து திருந்தினால் ஒழிய, வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று துரைமுருகன் சொல்கிறார். இப்படி சொல்வதற்கு அரசு எதற்கு.

கள்ளச்சாராயம் காய்ச்சினால் 10 லட்சம் ரூபாய் அபராதம்… ஆயுள் தண்டனை என்று முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். இது எல்லாம் கண் துடைப்பு நாடகம்.

இப்போது தான் முதன்முறையாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா? கடந்த ஆண்டு யாரும் இறக்கவில்லையா?
துரைமுருகன் பேசிய ஒரு சான்று போதும். இந்த அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பிரியா

கருத்துகள் இல்லை: