புதன், 22 மே, 2024

எஸ்.ஆர்.சேகரிடம் (BJP) இரண்டு மணி நேர விசாரணை! நயினாரை கை கழுவிய அண்ணாமலை. 4 கோடி விவகாரத்தில் நடப்பது என்ன?

 மின்னம்பலம் -   Aara :  வைஃபை ஆன் செய்ததும் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “ஏப்ரல் 6 ஆம் தேதி பாஜகவின் நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் ரொக்கத்தை, தேர்தல் பறக்கும் படையும், தாம்பரம் போலீஸும் சேர்ந்து கைப்பற்றியது.
சில நாட்களில் இந்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே மாநில தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனிடம் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், அடுத்து பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.



சேகருமே கூட சம்மனை எதிர்பார்த்துதான் இருந்தார். இன்னும் சொல்லப் போனால் அவருடைய பேரன் பிறந்தநாள் விழாவுக்காக சில நாட்களுக்கு முன் எஸ்.ஆர்.சேகர் ஜார்க்கண்ட் செல்லத் திட்டமிட்டார். அதனால் அந்த இடைவெளியில் சம்மன் அனுப்பிவிட்டு, வீட்டில் இல்லை என்று சொல்லி தலைமறைவு என்று போலீசாரே செய்தி பரப்பிவிடப் போகிறார்கள் என்று கொஞ்சம் எச்சரிக்கையோடே இருந்தார்.

தனக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகளிடம் சிபிசிஐடி சம்மன் அனுப்பும் முறை என்ன என்பது குறித்து கேட்டறிந்துகொண்டார். வீட்டுக்கு வந்து நேரில் கொடுப்பார்கள், போன் செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதற்கிடையே பேரன் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு கோவை திரும்பிய எஸ்.ஆர்.சேகரின் வீட்டுக்கு நேற்று சென்று சம்மன் கொடுத்திருக்கிறார்கள் சிபிசிஐடி போலீஸார்.

அதாவது மே 21 சென்னை எழும்பூரில் சிபிசிஐடி ஆபீஸில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, எஸ்.ஆர். சேகர், தான் இன்னும் பத்து நாட்களுக்கு கட்சி வேலை தொடர்பாக வெளியூர் செல்வதாகவும், மே 31 ஆம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அதை எழுதித் தரச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். எழுதியும் கொடுத்திருக்கிறார்.

போலீஸ் வந்து போனது பற்றி தனது நண்பர்களாக இருக்கும் போலீஸ் அதிகாரிகளிடமும் ஆலோசித்துள்ளார். மேலும், மாநிலத் தலைவர் அண்ணாமலையிடமும் ஆலோசித்திருக்கிறார் எஸ்.ஆர். சேகர். ஏனென்றால் இதுவரைக்கும் இந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமான நிர்வாகிகள் என்றால் கோவர்த்தனை மட்டும்தான் போலீசார் விசாரித்துள்ளனர். அவர் கட்சியின் ஓர் அணியின் நிர்வாகிதான்.

மாநிலப் பொருளாளராக இருக்கும் சேகரிடம் விசாரணை என்பது பாஜக மீதான விசாரணையாகவே பொருள்படும். எனவே, இதுகுறித்து அவர் வெளி மாநிலத்தில் இருந்த அண்ணாமலையிடம் ஆலோசித்திருக்கிறார்.

‘நயினார் நாகேந்திரனுக்காக பணத்தைக் கொண்டு போனவர்கள் அவரது தனிப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள். இதில் எந்த வகையிலும் கட்சியை நாம் அசிங்கப்பட விடக் கூடாது. அதனால் உங்களிடம் போலீசார் விசாரித்தால், அது கட்சிப் பணம் இல்லை என்று மாநிலப் பொருளாளர் என்ற வகையில் சொல்லிவிடுங்கள்’ என்று அண்ணாமலை சேகரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படியே இன்று தன்னிடம் விசாரணைக்கு வந்த சிபிசிஐடி போலீசாரிடம், ‘அந்த பணத்துக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது அவருடைய பணமா, வேறு யாருடைய பணம் என்பதை நீங்கள் விசாரித்துக் கொள்ளுங்கள்…’ என்று சேகர் சொல்லியிருக்கிறார்.

கோவர்த்தன் டிரைவரிடம் நீங்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி போனில் பேசியிருக்கிறீர்களே, அவருடைய கட்டிடத்துக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, ‘எனக்கு தினமும் பல போன் அழைப்புகள் வருகின்றன. அதுபற்றியெல்லாம் நான் நினைவில் வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று பதிலளித்திருக்கிறார் எஸ்.ஆர்.சேகர்.

சுமார் இரண்டு மணி நேர விசாரணையில் அந்த நான்கு கோடி ரூபாய் பணத்துக்கும் பாஜகவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, அது கட்சியின் தேர்தல் பயன்பாட்டுக்கான பணம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார் சேகர்.

பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘நேற்று தான் சேகர் அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால், இன்று காலை வந்துவிட்டார்கள். சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதற்கு பாஜகவில் இருந்து தயாராகிக் கொண்டிருந்தனர்.

ஒருவேளை நீதிமன்றம் தடை கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற அடிப்படையில் தான் அவசர அவசரமாக சேகரை தேடி வந்திருக்கிறார்கள் போலீசார். இன்று நடந்த விசாரணையில் சேகரிடம் எழுத்துபூர்வமாக எதையும் போலீஸ் வாங்கவில்லை’ என்று கூறுகிறார்கள்.

இந்த விசாரணை விவரங்கள் பற்றி நயினார் நாகேந்திரன் ஆர்வமாக கேட்டறிந்திருக்கிறார். அது கட்சிப் பணம் இல்லை என்று சேகர் பேட்டியை டிவியில் பார்த்த நயினார் வேதனைப்பட்டதாக சொல்கிறார்கள் அவரது தரப்பினர்.

’எல்லாருக்கும் கட்சிதான் பணம் கொடுத்து அனுப்பியது. ஆனால், நயினாருக்கு கொடுத்தது மட்டும் எப்படி கட்சிப் பணம் இல்லை என்றாகும்? நயினாரை கை கழுவுகிறார் அண்ணாமலை. அதற்கு கோவைகாரர் என்ற அடிப்படையில் துணைபோகிறார் சேகர்’ என்று நெல்லையில் நயினாரின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே புலம்புகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: