கலைஞர் செய்திகள் - Lenin : தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டதும் பெண்களது வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் விடியல் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் இலவசமாக மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள்.
இதனால், சராசரியாக பெண் ஒருவருக்கு மாதம் ரூ.800 சேமிக்க உதவுகிறது. இந்த பணம் அவர்களது குடும்பத்திற்கு சத்தான உணவுகளை வாங்குவது முதல் பல அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இல்லத்தரசிகள், முறைசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் விடியல் பயணத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த திட்டத்தை மகளிர் மட்டுமல்லாது இந்த நாடே பாராட்டி வருகிறது. பல மாநிலங்களுக்கு இந்த திட்டம் முன்னோடியாக அமைந்துள்ளது. இந்த சூழலில் தொடர்ச்சியாகவே இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பிரதமர் மோடி தற்போது மீண்டும் மகளிர் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ள இலவச பேருந்து திட்டத்தை நாசுக்காக விமர்சித்துள்ளார்.
பிரபல இந்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, ”இலவச பேருந்து பயண திட்டத்தால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த கருத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.
பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக