நக்கீரன் :“நான் மனிதப் பிறவியே இல்லை” - பிரதமர் மோடி
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சாதாரண மனிதர்களைப் போல நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன்.
என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் தேதி, ஒடிசா மாநிலம், பூரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரான சம்பித் பத்ரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “கடவுள் ஜெகன்நாதரே பிரதமர் மோடியின் பக்தர்தான்” என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையானது. அதற்கு ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட எதிர்க்கட்சியினர் அனைவரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தான் மனிதப்பிறவி இல்லை என்றும், கடவுள் தான் தன்னை அனுப்பியிருக்கிறார் என்றும் பிரதமர் மோடி கூறியிருப்பது பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக