tamil.oneindia.com - Kadar Karay : சென்னை: நாளை 8 மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அது குறித்து தராசு ஷ்யாம் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 381 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
நாளை 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. இதில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மொத்தம் 8 மாநிலங்களில் இந்த வாக்குப் பதிவு நடக்க உள்ளது.
நடந்து முடிந்துள்ள 4 கட்ட தேர்தல்களும் பாஜகவுக்குச் சாதகமாக இல்லை என்பது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் பாஜகவின் பிரச்சார யுக்தி மக்களிடம் எடுபடவில்லை. வகுப்புவாத அரசியலை மட்டுமே பேசி வருகிறார் பிரதமர் மோடி. அவரிடம் நாட்டின் வளர்ச்சி குறித்த எந்தப் புதிய திட்டங்களும் இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
420 தொகுதிகள் வரை வெல்வோம் என்று இலக்கு நிர்ணயித்திருந்த பாஜக, 220 தொகுதிகள் வரை வெற்றி பெற்றாலே அது ஆச்சரியம் தான் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
நாளை 5 ஆம் கட்ட தேர்தலுக்குப் பிறகு இன்னும் மாற்றங்கள் வரலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். அவர் காங்கிரஸ் கட்சி 150 முதல் 200 தொகுதிகளில் வென்றால் கூட ஆட்சி அமைப்பது உறுதி என்றும் சொல்கிறார்.
இது எப்படி சாத்தியம்? அது பற்றி விளக்கம் அளிக்கிறார் ஷ்யாம், "பாஜக இந்த மக்களவைத் தேர்தலில் 420 தொகுதிகளில் போட்டிப் போடுகிறது. வடமாநிலங்களில் 90% இடங்களில் போட்டியிடுகிறது. பீகார், குஜராத், உபி ஆகிய மாநிலங்களில் 100% இடங்களில் போட்டியிடுகின்றது.
அப்படிப் பார்த்தால் சராசரியாகப் பார்த்தால் 420 இடங்களில் 220 இடங்களைக் கைப்பற்றும் என்பது என் கணிப்பு.
அடுத்தது இந்தியா கூட்டணி. அதில் காங்கிரஸ் மட்டும் 320 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் பிரியங்கா காந்தி வடநாட்டில் மிகப்பெரிய அளவில் வசீகரம் உள்ள தலைவராக உருவெடுத்துள்ளார். அவருக்கு வடமாநிலங்களில் நல்ல செல்வாக்கு உள்ளதை அவரது பேரணிகள் மூலம் உணர முடிகிறது.
அடுத்து மக்களுடன் இணைந்திருக்கிறார்கள். பிரியங்கா பேரணியில் மக்கள் அவருடன் சகஜமாக நடைபோடுவதைப் பார்க்க முடிகிறது. அதேபோல் ராகுல். சாதாரண சலூன் கடையில் போய் முகச்சவரம் செய்து கொள்கிறார். இவை எல்லாம் மக்களிடம் நன்றாக எடுபட்டுள்ளது.
அப்படிப் பார்த்தால் காங்கிரஸ் போட்டிப்போடுகின்ற 320 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது எனது கணிப்பாக உள்ளது. அதற்கு முன்னால் 150 தொகுதிகள் வரை வரும் என கணித்திருந்தேன்.
ஆனால், 4 ஆம் கட்ட தேர்தல்களுக்குப் பிறகு பாஜக செல்வாக்கு மிக மோசமாகிவிட்டது. அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள். அதன்பின்னர் தான் இப்போது காங்கிரஸ் 200 சீட்டுகளைப் பிடிக்கும் என்ற முடிவுக்கு நகர்ந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். கர்நாடகாவில் 15 முதல் 20 இடங்களைப் பிடிக்கும். ஆந்திராவும் தெலுங்கானாவும் சேர்த்து 15 முதல் 20 பிடிக்கும். கேரளாவில் 18 இடங்களில் வெற்றி பெறும் என்பது கணிப்பு. இவற்றை மட்டும் கூட்டிப் பார்த்தாலே 70 தொகுதிகள் வருகின்றன.
அடுத்து வடமாநிலங்கள். மகாராஷ்டிராவில் காங் கட்சிக்குக் குறைந்தது 12 சீட்டுகள் வரும். ஹரியானா, டெல்லி எனப் பார்த்தால் 10 தொகுதிகள் வரைக் கிடைக்கும்.
எனவே என்ன சொல்ல வருகிறேன் என்றால், காங்கிரஸ் கட்சி முதற்கட்டத்தின் 150 தொகுதிகளை வெல்லும் என்ற நிலை இப்போது மாறியுள்ளது. அவர்கள் 200 வரை பிடிப்பார்கள் என்பதே கள நிலவரமாக உள்ளது.
இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான தனிப் பெரும்பான்மைக்கான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. பாஜக வலுவை இழந்து வருகிறது.
இது 6ஆம் கட்டம் 7 ஆம் கட்டத்தில் வேறு மாதிரியாக இன்னும் கூட மாறலாம். அதில் கூட பாஜகவுக்கு ஆதரவு பெருகும் என்பதில் நம்பிக்கை இல்லை.
பலர் என்ன சொல்கிறார்கள் 240 இடங்களை பாஜக பிடித்தால் கூட, கூட்டணிக் கட்சிகள் சிலர் ஆதரவு தந்துவிடுவார்கள். ஆகவே ஆட்சிக்கு பாஜக வந்துவிடும் என்கிறார்கள்.
அப்படி என்றால் பாஜக ஆதரவு கட்சிகள் எவை? உதாரணமாக ஒடிசாவில் நவீன் பட்நாயக். இவர் பாஜகவுக்கு எதிராக மாறிவிட்டார். ஆந்திராவில் ஜெகன். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக கொண்டுவந்த எல்லா சட்டத்திற்கு ஆதரவு தந்தார். அங்கே சந்திரபாபு நாயுடுவை பாஜக ஜெகனுக்கு எதிராக வளர்த்துவிடுகிறது. எனவே அவரும் பாஜகவுக்கு எதிராக மாறிவிட்டார்.
கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவு கட்சிகள் இல்லை. தமிழ்நாட்டில் இல்லை. உபி, பீகார் போன்ற மாநிலங்களில் கூட கூட்டணிக் கட்சிகள் பாஜகவுக்கு இல்லை. அரசியல் அநாதையாக பாஜக மாறியுள்ளது. அதுவே உண்மை.
ஆனால், காங்கிரசுக்கு ஆதரவு தருவதற்கு இவர்கள் அனைவரும் முன்வருவார்கள். காரணம், காங்கிரஸ் 200 கீழேதான் இருக்கும். அப்படி என்றால் கூட்டணிக் கட்சி ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியாது. எனவே கைக்கு அடக்கமான காங்கிரஸ் கட்சியை இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள்.
அதை மனதில் வைத்துத்தான் மம்தா, 'நாங்கள் வெற்றி பெற்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வெயிலிருந்து ஆதரவு தருவோம்' என்கிறார். இதே நிலைப்பாட்டைத் தான் கூட்டணிக் கட்சிகள் பல எடுக்கும்" என்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக