புதன், 16 நவம்பர், 2022

திராவிடர் என்ற இனம் இல்லை”- ஆளுநர் ரவி பேச்சு!

திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்தாலே மிரளும் பீதி ஆளுநர் ரவி பேச்சில்  வெளிப்படுகிறது: டி.ஆர்.பாலு | Dmk Mp TR Balu Condemn to Governor Rn Ravi -  Tamil Oneindia

minnambalam.com  -  Kalai :  “திராவிடர் என்ற இனம் இல்லை”- ஆளுநர் ரவி பேச்சு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் பற்றியும், திராவிடம் பற்றியும் தொடர்ந்து தனது கருத்துகளை பேசி வரும் நிலையில்… ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ள நிலையில்… மீண்டும் தனது பல்லவியை பாடத் தொடங்கிவிட்டார் ஆளுநர்.
திராவிடர் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் தவறாக குறிப்பிட்டதையே தற்போதும் பின்பற்றி வருகின்றனர் என இன்று (நவம்பர் 16) ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பழங்குடியின பெருமை தின விழா நடைபெற்றது.


இதில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
 அப்போது பேசிய அவர், “திராவிடம் இனம் என தவறாக ஆங்கிலேயர் குறிப்பிட்டதையே தற்போதும் பின்பற்றி வருகின்றனர்.
இந்தியாவின் வடக்கே ஆரிய பகுதி எனவும் தெற்கில் இருப்பவர்கள் திராவிடம் எனவும் குறிப்பிட்டு இன்னும் பாடப்புத்தகத்தில் படித்து வருகிறோம்.

பழங்குடியின மக்களிடையே செயற்கைத்தனமான வகைப்படுத்தலை ஆங்கிலேயர் செய்தார்கள், ஏன் இந்த வகைப்படுத்தல் என்ற கேள்வி எனக்குள்ளும் எழுகிறது” என்று ஆளுநர் ரவி கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், “பழங்குடியின மக்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநில அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

8 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் 8 லட்சம் பேர் இருக்கும் பழங்குடியின  மக்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை கருத்தில் கொள்ளவேண்டும்” என்றும் பேசினார் ஆளுநர்.

கலந்துரையாடலின் போது, காவல்துறை  அதிகாரியாக வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமென மாணவி ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த ஆளுநர், “முதலில் நன்றாக படிக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் விரும்பிய காவல் அதிகாரியாக வரலாம்” என்றார்.

முன்னதாக சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா படத்திற்கு ஆளுநர் ரவி மற்றும் மாணவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர்.

மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களை பாராட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தகங்களையும் வழங்கினார்.

கலை.ரா

கருத்துகள் இல்லை: