வியாழன், 17 நவம்பர், 2022

சீன அதிபர் கனடா பிரதமர் நேருக்கு நேர் மோதல்! “உங்களிடம் நேர்மை இல்லை” முகத்திற்கு நேராக குற்றம்சாட்டிய சீன அதிபர்

பிபிசி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் முகத்துக்கு நேராகக் குற்றம் சாட்டிப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த அரிய சம்பவம் இந்தோனீசியாவின் பாலி நகரில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின்போது நிகழ்ந்தது.
மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விஷயங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மொழிபெயர்ப்பாளர் உதவியோடு குற்றம் சாட்டிப் பேசினார்.
கனடா தேர்தலில் சீனா உளவு பார்த்ததாகவும் தலையீடு செய்ததாகவும் கூறப்படுவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது ட்ரூடோ பேசியதாக செய்திகள் வெளியாயின.
இந்த செய்திகள் பற்றிக் குறிப்பிட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளார் ஷி ஜின்பிங்.
பேச்சுவார்த்தை விவரம் கசிந்தது குறித்துப் பேசிய ஜின்பிங் ஜஸ்டின் ட்ரூடோ நேர்மையாக இல்லை என்றும் இத்தகைய நடத்தை பொருத்தமற்றது என்றும் நேருக்கு நேராகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இயல்பான சந்திப்பின்போது இப்படி நேருக்கு நேராகக் குற்றம் சாட்டுவது தலைவர்களுக்கு இடையில் அரிய நிகழ்வு.
வீடியோவில் இருப்பது என்ன?
பத்திரிகையாளர்கள் வீடியோவில் பதிவான இந்த நிகழ்வில் ஷி ஜின்பிங்கும் ட்ரூடோவும் அருகருகே நின்று பேசுகிறார்கள்.
“நாம் விவாதித்த எல்லாமும் செய்தித்தாள்களுக்கு கசியவிடப்பட்டிருக்கிறது. இது முறையற்றது” என்று ஷி ஜின்பிங், ட்ரூடோவிடம் சீன மொழியான மான்ட்ரினில் கூறுகிறார்.
இதற்கு சிரித்துக்கொண்டே தலையாட்டிய ட்ரூடோ, “கனடாவில் நாங்கள், சுதந்திரமான, வெளிப்படையான, மனம் திறந்த உரையாடலில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்,” என்று பதில் அளிக்கிறார்.

“ஆக்கபூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம். ஆனால், நாம் உடன்பாடு காணமுடியாத விஷயங்களும் இருக்கும்,” என ட்ரூடோ கூறினார்.

அவர் பேசி முடிக்கும் முன்பாகவே குறுக்கிட்ட ஷி ஜின்பிங், “அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள்” என்று கூறிவிட்டு ட்ரூடோ கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு நகர்ந்து சென்றார்.

சீனா – கனடா இறுக்கம்: காரணம் என்ன?
இரு தலைவர்கள் இடையிலான சுருக்கமான இந்த உரையாடல் சீனா – கனடா இடையே நிலவும் இறுக்கமான நிலையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

சீனாவின் ஹுவாவேய் நிறுவன அதிகாரி மெங் வாங்சூ என்பவரை 2018இல் கனடா கைது செய்தது. அதைத் தொடர்ந்து சீனாவில் இரண்டு கனடா நாட்டவர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் இறுக்க நிலை உருவானது. பிறகு இந்த மூவருமே விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், சமீபத்தில் கனடாவில் ஹைட்ரோ-கியூபெக் நிறுவன ஊழியர் யூஷெங் வாங், வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் இந்த உரசல் தீவிரமாகியுள்ளது.

கனடாவின் பொருளாதார நலன்களுக்குப் பாதகமாக, சீனாவுக்கு பலன் தரும் வகையில் வணிக ரகசியங்களைப் பெற்றதாக அவர் மீது கனடா போலீஸ் குற்றம் சாட்டியது. இது நடந்துகொண்டிருந்தபோது, ஷி ஜின்பிங், ட்ரூடோ ஆகிய இரு தலைவர்களும் ஜி20 மாநாட்டில் இருந்தனர்.

கருத்துகள் இல்லை: