வியாழன், 17 நவம்பர், 2022

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு?

 மாலைமலர் : சென்னை பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணிகளை நோக்கி நகர தொடங்கி விட்டன.
தேர்தல் நேரங்களில் கூட்டணி கட்சிகள் மாறுவது வழக்கமானது தான். இந்த மாற்றங்களுக்கு திரை மறைவு ரகசியங்கள், வெளிப்படையான பிரச்சினைகள் காரணமாக அமையும்.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதாவும், தி.மு.க.வுடன் காங்கிரசும் சேர்ந்தன. இந்த கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்தன.
இதில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் இடம்பெற்றன.
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் காங்கிரசுக்கு 'சீட்'களை கேட்டு பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கான தேர்தல் என்பதால் கூடுதல் தொகுதியை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த அளவுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்க தி.மு.க. முன்வராது.அதற்கு காரணம் காங்கிரசின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் தடம் பதிக்க விரும்புவதால் கூடுதலான எம்.பி.களுடன் பாராளுமன்றத்தில் வலுவான கட்சியாக இருப்பதையே விரும்பும்.

இந்த நெருக்கடியில் தான் கூட்டணியில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் 'சீட்' கிடைக்காவிட்டால் கூட்டணி மாறுவது பற்றி யோசிக்கலாம் என்ற மனநிலையில் காங்கிரசார் உள்ளனர்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜனதா கூட்டணியில் இருப்பதால் பலன் இல்லை என்றே நினைக்கிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க பா.ஜனதா மேலிடம் வற்புறுத்துவதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

டி.டி.வியும் வேண்டாம், ஓ.பி.எஸ்.சும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி தலைவர்களை சந்தித்து வலியுறுத்துவதால் பா.ஜனதா தலைவர்களும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

முக்கியமாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியை விட ஓ.பன்னீர்செல்வம் தான் நமக்கு ஆதரவாக இருப்பார் என்ற கருத்தும் பா.ஜனதா தலைவர்களிடம் உள்ளது.

பா.ஜனதாவின் நெருக்கடியில் இருந்து விலகி செயல்படும் மன நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாக கூறப்படுகிறது.

வருகிற 21-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவை பொறுத்து மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.

காங்கிரசை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம், முன்னேறியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவற்றில் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. உள்ளது.

எனவே தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா? என்ற தயக்கத்தில் இருக்கும் காங்கிரசையும், பா.ஜனதா கூட்டணியில் தொடர தயங்கும் அ.தி.மு.க.வையும் சேர்த்து விடுவதற்கான வேலை டெல்லி அளவில் ஜரூராக நடப்பதாக கூறப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் பட்சத்தில் பா.ம.க., தி.மு.க. அணிக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் வெளியேறும். அந்த கட்சி காங்கிரஸ் அணியில் இடம் பிடிக்கும்.

இப்படி ஒரு சூழ்நிலை உருவானால் 2014 தேர்தலை போல் வருகிற தேர்தலிலும் பா.ஜனதா தனித்து விடப்படும். அது மும்முனை போட்டிக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டணி மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் எந்த அணியில் இடம் கிடைக்கும் என்று சில சிறிய கட்சிகள் தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: