சனி, 19 நவம்பர், 2022

திமுக நிர்வாகிகள் குமுறல்! அரசின் நியமனங்கள்

 minnambalam.com - Prakash : டிஜிட்டல் திண்ணை: அரசின் நியமனங்கள்- திமுக நிர்வாகிகள் குமுறல்!
வைஃபை ஆன் செய்தவுடன் இன்ஸ்டாவில்  சில துண்டு வீடியோக்கள் வந்தன.
 சில வாரங்களுக்கு முன் திருச்சியில் அமைச்சர் நேரு, ‘தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்’ என்று பேசிய வீடியோவும் சில நாட்களுக்கு முன் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேசியபோது,
 ’சில அதிகாரிகளுக்கு நாம் வந்ததே இன்னும் பிடிக்கவில்லை. அவர்களை நாங்கள் வெறுக்க முடியாது.
ஒரு பிடிஓவிடமே நீங்கள் இவ்வளவு பாடுபடுகிறீர்கள் என்றால் நாங்கள் எப்படி பாடுபடுவோம்?  
நீங்களும் நாங்களும் இல்லாமல் ஆட்சி இல்லை. இந்த ஆட்சி வந்து ஒன்றரை ஆண்டாகிறது. அந்த லகான் எங்களிடம் சரியாக வரவி்ல்லை. ஆளுநர் வேறு லகானை பிடித்துக்கொண்டார்.   இல்லாவிட்டால் எவ்வளவோ செய்திருப்போம்’ என்று ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரிகளால் ஏற்படும்  சங்கடங்களை சில நாட்களுக்கு முன் அமைச்சர் நேரு பேசியதைப் போல வெளிப்படையாக பேசினார் துரைமுருகன்.

இந்த இரு வீடியோக்களை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “பத்து வருடம் கழித்து திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் மட்டுமல்ல… திமுகவுக்கு ஆதரவுப் போக்கு கொண்ட சில அதிகாரிகளும் கூட நமக்கு ஒரு வழி பிறந்துவிட்டது என்று கருதினார்கள்.

‘பத்து வருடமாக அதிமுக ஆட்சியில் திமுக அதிகாரிகள் என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தோம். இந்த ஆட்சியிலாவது நமக்கு நல்ல காலம் பிறக்கும்’ என்று அவர்கள் வெளிப்படையாக பேசி வந்தார்கள்.  

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே திமுக ஆட்சியின் நியமனங்கள் எல்லாம் நடந்தன.  முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க நினைக்கிறார், அதனால் ஆதரவு அதிகாரிகள், எதிர்ப்பு அதிகாரிகள் என்ற பேதமெல்லாம் அவர் பார்க்கவில்லை என்று கோட்டை வட்டாரத்தில் உயரதிகாரிகள் தரப்பில் இதற்கு பதில் பேசப்பட்டது.

சீனியர் அமைச்சர்கள்கூட அதிகாரிகளின் நியமனத்தைப் பார்த்து குமுறினார்கள்.  ‘கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுகவினரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எங்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட்ட அதிகாரிகளை இப்போது எங்கள் துறைக்கே நியமித்திருக்கிறார்கள். 

அவர்களை வேறு துறைக்காவது மாற்றுங்கள்’ என்று சீனியர் அமைச்சர்கள் முதல்வர் அலுவலகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். ஆனால் இந்த போக்கு தொடர்கிறதே தவிர நிறுத்தப்படவில்லை.

இதற்கிடையே பத்து வருடமாக எதிர்க்கட்சியாக இருந்து பாடுபட்ட கட்சி நிர்வாகிகளுக்கு வாரியப் பதவி  கொடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினரிடையே நிலவியது. 

இதோ, அதோ என்று சொல்லப்பட்டதே தவிர இன்னும் வாரியப் பதவிகள் முழுமையாக நிரப்பப்படவில்லை. இந்த நிலையில்  திமுகவுக்கு எதிராக ஒரு காலத்தில் செயல்பட்டவர்களுக்கெல்லாம் இந்த ஆட்சியில் உயர் பதவிகள் கிடைக்கின்றதே என்று அமைச்சர்களே இப்போது வெளிப்படையாக தங்களது ஆதரவாளர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். 

இதற்கு லேட்டஸ்ட் உதாரணம். நவம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்  ஆணையத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் அறிவிக்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தற்போது அமைச்சராக இருப்பவர் ராஜ கண்ணப்பன்.

government appointment dmk members distress
பாரதிதாசன்

இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பைப் பார்த்த திமுக வழக்கறிஞர்கள்,  ‘பாரதிதாசன் அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்.

அதன்பின் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அவர் நீதிபதியாகவும் ஆனார்.  ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சி வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பாரதிதாசன், தற்போது திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக  முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கருத்தையா பாண்டியன். இவருக்கும் ஒரு வரலாறு உண்டு. இவர் சசிகலாவின் ஆதரவாளராக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்பட்டவர். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஈரோடு சப் கலெக்டராக அமுதா ஐ.ஏ.எஸ். இருந்தபோது கருத்தையா பாண்டியன் ஈரோடு மாவட்ட கலெக்டராக இருந்தார். 

அப்போது அமுதாவுக்கு நிர்வாக ரீதியாக பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார் கருத்தையா பாண்டியன். ஆனால் அதன் பின் திமுக ஆட்சி அமைந்தபோது முதல்வராக பதவியேற்ற கலைஞர், அமுதா ஐ.ஏ.எஸ். மீது எந்த தவறும் இல்லை என்பதை விசாரித்து அறிந்து அவரை தர்மபுரி கலெக்டர் ஆக்கினார்.

அப்படிப்பட்ட அமுதா இன்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக இருக்கிறார். அதேநேரம் கருத்தையா பாண்டியன் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட நியமனங்கள் மூலம் தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தி அமைச்சர்களிடையேயும்  அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நியமனங்களை எல்லாம் மேற்கொள்ளும் முன்  அவர்களின் முந்தைய கால நடவடிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா இல்லையா… திமுகவை எதிர்த்தவர்கள், திமுகவினருக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் செயல்பட்டவர்களுக்கெல்லாம் இப்போது திமுக ஆட்சியில் முக்கிய பதவியா என்ற கேள்விகள்தான் இப்போது திமுக வட்டாரத்தில் எதிரொலிக்கின்றன.

எங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்ற துயரத்தை விட எங்களை எதிர்த்தவர்களுக்கு பதவி கிடைக்கிறது என்பது எவ்வளவு பெரிய துயரம்? என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்” என்ற மெசெஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: