வியாழன், 17 நவம்பர், 2022

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து!

 minnambalam.com - Kalai   : சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
1996 ஆம் ஆண்டில் குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த, தற்போதைய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், 1.55 ஏக்கர் நிலத்தை, நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் அளித்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், நில அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரித்தது என இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி இளந்திரையன், ஜெகத்ரட்சகன் மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.


இந்தநிலையில் ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிபிசிஐடி தொடர்ந்த வழக்குகளை தனி நீதிபதி ரத்து செய்ததால் அதை ஆதாரமாகக் கொண்டு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் செல்லாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கை ரத்து செய்யக்கோரி  ஜெகத்ரட்சகன் மனுவை இன்று(நவம்பர் 17)விசாரித்த நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வு அமலாக்கப்பிரிவின் வழக்கை ரத்து செய்தது.

கலை.ரா

கருத்துகள் இல்லை: