செவ்வாய், 15 நவம்பர், 2022

தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு . இரு மருத்துவர்கள் இடை நீக்கம்

தினமலர்  : சென்னை; விளையாட்டு வீராங்கனை உயிரிழக்க காரணமாக இருந்த, இரண்டு டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா..சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிகுமார். அவரது மகள் பிரியா, 17; கால்பந்து வீராங்கனையான இவர், ராணிமேரி கல்லுாரியில், விளையாட்டு பிரிவில், பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
இவருக்கு, வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியதால், கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடந்தது. மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரது கால் அகற்றப்பட்டது.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகத் தான், பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக, பெற்றோர் குற்றம் சாட்டினர்.இதுதொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: பிரியாவின் வலது கால்மூட்டு ஜவ்வு சேதமடைந்து இருந்ததால், அவருக்கு மூட்டு உள்நோக்கி கருவியின் வாயிலாக, ஜவ்வு சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக, ரத்த சேதத்தை தடுக்க, சுருட்டு கட்டு போடப்பட்டது. இதனால், ரத்த ஓட்டம் தடைபட்டு, உயிர்காக்கும் விதமாக காலை எடுப்பதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சிறிய கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்புக்காக மிகவும் வருந்துகிறோம். அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையை சார்ந்த இரண்டு டாக்டர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நிவாரணம்:
இந்நிலையில் பிரியாவின் உயிர் இன்று பிரிந்தது. இவரது குடும்பத்தினருக்கு ரூ. 10 லடசம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் . இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பிரேத பரிசோதனை
உயிரிழந்த பிரியாவின் உடல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்சில் ஏற்ற முயன்றனர். ஆனால், அதனை தடுத்த உறவினர்களும், நண்பர்களும் இணைந்து தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழப்பிற்கு காரணமான டாக்டர்களை கைது செய்ய வேண்டும் என கோஷம் போட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா, குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். சகோதரி பிரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.

டாக்டர்களை கைது செய்யணும்:
கால்பந்து வீராங்கனை பிரியா தந்தை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: என் மகள் பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் கைது செய்யப்பட வேண்டும். இனி இது போன்று எந்த அரசு மருத்துவமனையிலும் யாருக்கும் நடக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: