திங்கள், 14 நவம்பர், 2022

24 மாவட்டங்களில் 45 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது-

மாலைமலர் : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 12-ந் தேதி (நேற்றுமுன்தினம்) 37 மாவட்டங்களில் 19.14 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 68.17 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் சராசரியாக 47.01 மி.மீ. மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினம் பெய்த மழையால் சேலம் மாவட்டத்தில் ஒருவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 83 கால்நடைகள் இறந்துள்ளன. 538 வீடுகள் சேதமடைந்தன.

இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும், கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் 38 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு 16 ஆயிரத்து 807 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு வீதம் தேசிய பேரிடர் மீட்பு படையின் 70 வீரர்களை கொண்ட 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரத்து 826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது. வயல்வெளியில் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்றும், நாளையும் தமிழகத்தில் பல இடங்களிலும், நாளை மறுநாள் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (திங்கட்கிழமை) லட்சத்தீவு பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரியின் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை: