திங்கள், 24 அக்டோபர், 2022

கோவை கார் வெடிப்பு: இறந்த ஜமேஷா முபின் வீட்டில் வெடிகுண்டு கச்சாப் பொருள்கள் - போலீஸ் தகவல்

BBC News தமிழ்  : கோவை காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்டதாக கருதப்படும் சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஜமேஷா முபின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும்,
அவருடைய வீட்டில் சோதித்தபோது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்ற பொருள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு "கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜமேஷா முபின் என்பது தெரியவந்துள்ளது.

அவருடைய வீட்டை சோதனை செய்தபோது அழுத்தம் குறைவான நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான கோலி குண்டு, பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்துள்ளனர். காரில் ஆணி இருந்துள்ளது. அவர் பயணம் செய்து வந்த கார் 9 பேர் கைமாறி உள்ளது. காவல்துறை துரிதமாக செயல்பட்டு அனைவரையும் கண்டறிந்துள்ளது. இவர் மீது முன்பு வழக்குகள் எதுவும் இல்லை. அவருடைய செல்போன் தரவுகளை ஆராய்ந்து யாரிடம் அதிகம் பேசியுள்ளார் என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வருகிறோம்" என்றார் சைலேந்திர பாபு.

இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருந்த போதும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே காவல்துறை சோதனை சாவடி இருந்ததால் அங்கே அவர் ஒதுங்கி உள்ளார். அப்போது தான் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்துள்ளது. எனினும் இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். ஜமேஷா முபின் எந்த அமைப்பையும் சார்ந்தவர் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

"இந்த வழக்கின் விசாரணையிலும் எந்த அமைப்பும் பின்னணியும் இல்லை. இவர் தனிநபராக செயல்பட்டாரா அல்லது வேறு திட்டங்கள் ஏதும் இருந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாநகர காவல்துறையே துரிதமாக செயல்பட்டு வருவதால் என்.ஐ.ஏ விசாரணை தேவையில்லை. தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவையில் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன" என்றும் கூறினார் சைலேந்திர பாபு.

சந்தேக மரணம் , வெடிமருத்து சட்டம் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் உடன் இருந்தனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வெறும் விபத்தாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், அனைத்துக் கோணங்களிலும் விசாரிக்கவேண்டும் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில்,

"கோவை, டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகே இன்று அதிகாலை 4.10 மணியளவில் வந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி, தீப்பற்றி எரிந்துள்ளது.

காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் வருகின்றன. கோவையில் தீபாவளிக்கு முதல் நாள், அதுவும் கோயில் முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை தமிழ்நாடு அரசும், காவல் துறையும் சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது. கோவை மாநகரம் ஏற்கனவே பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வந்துள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, முன்னாள் துணை பிரதமர் அத்வானியை கொல்வதற்காக, கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. அது தமிழ்நாட்டின் இருண்ட வரலாறு. சமீபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பு கோவையில் வலுவாக இருந்து வந்துள்ளது.

எனவே, கோவையில் அதிகாலையில் நடந்த காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அது ஏதாவது பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னோட்டமா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் காவல் துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஏனெனில் இனியொரு பயங்கரவாத சம்பவத்தை தாங்கும் சக்தி கோவைக்கும், தமிழகத்திற்கும் கிடையாது. எனவே அது பயங்கரவாத தாக்குதலாக இருந்தால் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். இன்று விவகாரத்தில், காவல்துறைக்கு பொறுப்பு வைக்கும் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தலையிட்டு விசாரணையை முடுக்கி விட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் வானதி.

கருத்துகள் இல்லை: