புதன், 26 அக்டோபர், 2022

“உ.பி யைச் சேர்ந்த ஆளுநருக்கு கேரளாவைப் பற்றி என்ன தெரியும்” - முதல்வர் பினராயி விஜயன் பதிலடி! அமைச்சரை நீக்க முடியாது

நக்கீரன் :கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமதுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இது தொடர்பாக சட்டத் திருத்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியும் அது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஆளுநர், " என்னை விமர்சித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும்" என சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மத்தியில் பாஜக அரசு, பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுக்கு ஆளுநர் மூலம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையில், இந்த சம்பவம் அதனை உறுதி செய்வது போல உள்ளதாக அம்மாநில ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வலியுறுத்தியுள்ளார். தமது ஒப்புதலை அமைச்சர் பாலகோபால் இழந்துவிட்டதாகக் கூறி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்வரிடம் அவர் வற்புறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் பிரச்னையில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கேரளத்தைப் புரிந்துகொள்ள முடியாது என அமைச்சர் பாலகோபால் பேசியுள்ளார். இதற்கு பதிலடியாக அவரை நீக்க ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை: