வெள்ளி, 28 அக்டோபர், 2022

ராசா மீது கோபம்? ஸ்டாலின் கொடுத்த பதில்! டிஜிட்டல் திண்ணை:

minnambalam.com -  Aara : அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வைஃபை தானாகவே கனெக்ட் ஆனது. வாட்ஸ் அப்பில், திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்ட அறிவிப்பு வந்தது. அதைப் படித்துவிட்டு ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டசை பதிவிடத் தொடங்கியது.
 “அண்மையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கம் பொதுக் கூட்டங்கள் திமுக தலைமைக் கழகம் சார்பாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.ொதுவாகவே திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் தலைமை கழகத்தின் வாயிலாக இதுபோன்று மாநில அளவில் அறிவிக்கப்படும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

அதிலும் கட்சியின் தலைவரான ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மாவட்டத்தை, தான் பேச தேர்வு செய்கிறார்  என்பதற்கு கூடுதல் முக்கியத்துவமும் உண்டு.

பொதுவாகவே ஆளும் கட்சியாக இருக்கும் போது முதல்வர் ஸ்டாலின்  சென்னையிலேயே அல்லது சென்னை சுற்றுப்புறத்திலேயே இது போன்ற நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஸ்டாலின் இம்முறை பெரம்பலூரை தேர்வு செய்து அங்கு பேசுவதாக அறிவித்திருப்பதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தின் மீது கூடுதல் கவனம் குவிந்திருக்கிறது.

angry on a rasa cm dmk leader mk stalin reply

திமுகவின் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தன்னுடைய மாவட்டத்தில் தலைவர் வந்து பேச வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள் முயற்சி எடுப்பார்கள். ஆனால் தலைவர் ஏதாவது ஒரு மாவட்டத்தில் தான் கலந்து கொள்ள தீர்மானிப்பார். இந்த வகையில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொது கூட்டத்திற்கு பெரம்பலூரை டிக் செய்திருக்கிறார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.

இந்த பொதுக்கூட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் திமுக ஒரு தெளிவான மெசேஜ் கொடுக்கிறது என்பது அரசியல் அரங்கத்தின் பேசு பொருளாக இருக்கிறது. அதேநேரம்…. தான்  கலந்துகொள்வதற்கு பெரம்பலூரை தேர்வு செய்ததன் மூலம் ஆ.ராசாவை பற்றி கடந்த சில வாரங்களாக அறிவாலய வட்டாரத்துக்குள் எழுந்த சலசலப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து கட்சிக்கும் ஒரு மெசேஜை சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.

கடந்த செப்டம்பர் மாதம் பெரியார் திடலில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா  பேசிய பேச்சு தமிழ்நாட்டு அரசியலில் பெரும் அதிர்வுகளை கிளப்பியது.  சனாதனம் பற்றிய ராசாவின் பேச்சுக்கு எதிராக பாஜக கொந்தளித்தது. இந்துக்களுக்கு எதிராக திமுக தொடர்ந்து இருக்கிறது என்பதற்கு ராசாவின் பேச்சே உதாரணம் என்றும் ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியது.

மேலும் ராசா மீது தமிழகத்தின் பல காவல்நிலையங்களில் புகார்களை அளித்தனர் பாஜகவினர். அப்போது திமுகவுக்குள்ளேயே சீனியர்கள்,  ’ராசா திமுகவுல இருந்துக்கிட்டு திக மாதிரியே இன்னும் பேசிக்கிட்டிருக்கார். தேர்தலை சந்திக்கும்போது ராசாவின் பேச்சுகள் திமுகவுக்கு பாதிப்பா இருக்கும். இதை அவர்கிட்ட சொல்லுங்க’ என்றெல்லாம் ஸ்டாலினிடம்   வேண்டுகோளாக முன் வைத்துள்ளனர்.

சில தினங்களில் மீண்டும் இதுபற்றி பேசிய ஆ.ராசா, ’திமுகதான் சாதாரண இந்துக்களுக்கான கட்சி. பாஜகவோ சனாதன இந்துக்களுக்கான கட்சி. சாதாரண இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோது அதை எதிர்த்தவர்கள் சனாதன இந்துக்கள். இதை சாதாரண இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று பேசினார்.  ராசாவின் இந்த பேச்சை இப்போதைய காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  கேட்டு அன்றைய காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியிடம் தெரியப்படுத்தினார்.

’ராசாவின் இந்த வாதம் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக எடுத்து வைக்கப்பட்டால், இதற்கு  பாஜகவால் பதிலே சொல்ல முடியாது.  பாஜகவின் பாணியிலேயே ராசாவால் சொல்லப்பட்ட இந்த பதிலை காங்கிரஸ் இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார் சோனியா. மேலும் சாதாரண இந்துவும் சனாதன இந்துவும் என்று ராசா பேசிய பேச்சு தெலுங்கு, மராட்டியம்,  குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் சப் டைட்டிலோடு தயாரிக்கப்பட்டு  அந்தந்த மாநிலங்களில் பரப்பப்பட்டது. இதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. ஆ.ராசாவின் பேச்சுக்கு அகில இந்திய ரீதியில் கிடைத்த முக்கியத்துவம் பற்றி சபரீசனுக்கும் அவரது வெளி மாநில நண்பர்கள் மூலம் தெரியவந்து அவரும் ஸ்டாலினிடம்  இந்த பாசிட்டிவ் ஃபீட்பேக்குகள் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

angry on a rasa cm dmk leader mk stalin reply

இதற்கிடையே   முதல்வர் ஸ்டாலின் பாஜகவினரின் வெற்று அரசியலுக்கு தீனி போடும்படி பேச வேண்டாம் என்றும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி  பேசுமாறும்  தொடர்ந்து கட்சியினருக்கு வெளிப்படையாகவே அறிவுறுத்தினார். இந்த நிலையில் ராசாவை  முதல்வர் ஸ்டாலின் கண்டித்துவிட்டார்  என்றும், அவருடனான நெருக்கத்தை ஸ்டாலின் குறைத்துக் கொண்டுவிட்டார் என்றும் அறிவாலயம் வந்து செல்லும் சில திமுக சீனியர்களே தங்களுடைய நெருக்கமான வட்டத்தில் கமென்ட் அடித்திருக்கிறார்கள்.

angry on a rasa cm dmk leader mk stalin reply

இந்த பின்னணியில்தான் கடந்த 25 ஆம் தேதி லண்டன் புறப்படுவதற்கு முன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராசா. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு  புரூக்ஸ் பல்கலைக் கழகத்தில், ‘சமூக நீதி மகளிர் உரிமை மற்றும்  திராவிட மாடல்’ என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக புறப்பட்டார் ராசா. அதோடு  அங்கே ஊட்டியை கண்டுபிடித்த ஆங்கிலேயரான  ஜான் சல்லீவன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதோடு, ஜான் சல்லீவனின் 200 ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழக அரசு நடத்தும் விழாவில் பங்கேற்குமாறு அவரது குடும்பத்தினரையும் முதல்வர் சார்பில் அழைத்திருக்கிறார்.

இப்படி ராசா லண்டனில் இருந்தபோதுதான் அவரது பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தான் பேச இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். இதன் மூலம் ராசாவின் மீது  தனக்கு எந்த கோபமும் இல்லை என்பதோடு கொள்கை சார்ந்து பேசும்  ராசாவை ஊக்கப்படுத்தும் விதமாக  செயல்பட்டிருக்கிறார் என்கிறார்கள் அறிவாலய  வட்டாரங்களில்.

angry on a rasa cm dmk leader mk stalin reply

ஏற்கனவே அரியலூர்  மாவட்டத்தில் பிரம்மாண்ட நலத்திட்ட விழாவில் கலந்துகொள்ள ஸ்டாலின் திட்டமிட்டிருந்த நிலையில்,பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதன் மூலம் ராசாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூருக்கு முக்கியத்துவம் கொடுத்து ராசாவுக்கான முக்கியத்துவத்தை தலைமைக் கழகத்தில் மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார் ஸ்டாலின்” என்ற ஸ்டேட்டசை பப்ளிஷ் செய்தது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: