சனி, 29 அக்டோபர், 2022

முதல்வர் ஸ்டாலின் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார்

zeenews.india.com  -  க. விக்ரம்  : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனைக்காக அவர் சென்னை போரூரில் இருக்கும் ராமசந்திரா மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்றார். அங்கு அவரது உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அந்த பரிசோதனையில் முதலமைச்சருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண முதுகு வலி என்பது உறுதியானது. தொடர்ந்து பரிசோதனை முடிந்த சூழலில் நேற்றிரவே வீடு திரும்பிவிட்டார். இதுதொடர்பாக ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதுகு வலிக்காக இந்த பரிசோதனை நடந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை அடுத்து கரோனாவிலிருந்து மீண்டார் ஸ்டாலின். சில மாதங்களுக்கு முன்பு கரோனா ஏற்பட்ட சூழலில் தற்போது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கட்சியினரும், குடும்பத்தினரும் சற்று அதிர்ச்சியடைந்தனர்.

இருப்பினும் சாதாரண முதுகு வலிதான் என்று உறுதியாகி அவர் மீண்டும் வீடு திரும்பியிருப்பதால் அவர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் முதலமைச்சர் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: