சனி, 29 அக்டோபர், 2022

சிலிண்டரை வைத்து கோவையை சின்னாபின்னமாக்க முபின் பிளான்.. வீட்டிலிருந்த 109 பொருட்கள்: என்ஐஏ எப்ஐஆர்

tamil.oneindia.com  -  Jeyalakshmi C  :  கோவை: கார் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவரின் வீட்டிலிருந்து 109பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொட்டாசியம் நைட்ரேட்,ஆக்ஸிஜன் சிலிண்டர், சல்ஃபர் பவுடர் உள்ளிட்ட வெடி குண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களுடன் ஜிகாத் வரிகள்கொண்ட நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்தக் காரை ஒட்டி வந்தஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தனர்.
கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. உயிரிழந்த முபின் வீட்டிலில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடி மருந்துகளும் சிக்கின.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோயிலின் பூசாரி எஸ்.சுந்தரேசன் புகாரளித்திருக்கிறார். இந்த வழக்கு முதலில் சந்தேக மரணம் என்றும் வெடிபொருட்கள் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் உக்கடம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

கோவை கார் வெடிப்பு.. கைதானவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை.. சிறையில் தீட்டிய சதி?கோவை கார் வெடிப்பு.. கைதானவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை.. சிறையில் தீட்டிய சதி?

களமிறங்கிய என்ஐஏ
கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை வெடிகுண்டு மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுபவை என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினருடன் என்ஐஏ அதிகாரிகளும் கோவையில் களமிறங்கினர். கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, சென்னை என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது.

முதல் தகவல் அறிக்கை
என்ஐஏ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 23.10.2022 அன்று உக்கடம்பகுதியில் உள்ள ஈசுவரன் கோயில் தெருவில் டிஎன் 01 எஃப் 6163 என்றபதிவு எண் கொண்ட மாருதி கார்அதிகாலை 4 மணியளவில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.காருக்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இந்தச் சம்பவத்தில் கோயில் பெயர் பலகை, அந்தப் பகுதியிலிருந்த கடை ஆகியவை சேதமடைந்தன.

109 பொருட்கள் பறிமுதல்
விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது. அவரது வீட்டிலிருந்து 109பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், தீப்பெட்டி, இரண்டு மீட்டர் நீளமுள்ள கிராக்கர் ஃபீஸ்,நைட்ரோ க்ளைரசின், சிகப்பு பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட்), அலுமினியம் பவுடர், ஓஎக்ஸ்ஒய் 99, ஆக்ஸிஜன் சிலிண்டர், சல்ஃபர் பவுடர், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு, கண்ணாடிகள், 9 வாட்ஸ் பேக்டரி, 9 வாட்ஸ் பேட்டரி கிளிப், வயர், ஆணிகள், சுவிட்ச், சிலிண்டர், ரெகுலெட்டர், டேப், கையுறைகள், ஜிகாத் வரிகள்கொண்ட நோட்டுகள் உள்ளிட்ட 109பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

என்ஐஏவின் முதல் வழக்கு
வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எஃப்ஐஆரில் கார் சிலிண்டர் வெடித்தது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சென்னையில் என்ஐஏ அலுவலகம் தொடங்கப்பட்டு. கோவை கார்சிலிண்டர் வெடிப்பு வழக்குதான்முதல் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சதி திட்டம்
இதனிடையே காவல்துறையினரிடம் பெரோஸ் இஸ்மாயில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முபினுடன் சேர்ந்து நாங்கள் திட்டம் தீட்டி வந்தோம். தீபாவளிக்கு முந்தைய நாள் எப்போதும் பரபரப்பாக காணப்படும் உக்கடம் பகுதியில் சதி திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டோம். இதற்காகத்தான் முபின் காரில் திட்டமிட்டு, வெடிபொருட்கள் மற்றும் சிலிண்டருடன் புறப்பட்டு சென்றான். ஆனால், எங்கள் எண்ணம் நிறைவேறவில்லை. காரிலேயே முபின் பலியாகி விட்டான். இதனால் நாங்களும் போலீசில் சிக்கிக்கொண்டோம்.

பயங்கரவாதியுடன் சந்திப்பு
இலங்கையில் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கோவையை சேர்ந்த முகமதுஅசாருதீன், கேரளாவை சேர்ந்த ரசீத் அலி இருவரையும் கேரளா சிறையில் சென்று சந்தித்தோம். அப்போது, கோவையில் குண்டுவைப்பது தொடர்பாக ஆலோசித்தோம். இந்த சந்திப்பின்போது நாங்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக பல விஷயங்களை பேசிக்கொண்டோம். வெடிமருந்துகளை கூரியரில் வாங்கினால் போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்திலேயே ஆர்டர் செய்து வாங்கினோம். வெடி மருந்துகளுக்கு தேவையான கரித்தூள் உள்ளிட்ட சில பொருட்களை மாவு மில் ஒன்றில் அரைத்து வாங்கினோம். அதனை முபினின் வீட்டில் சேகரித்து டிரம்மில் போட்டு வைத்தோம்.

சிலிண்டரை வெடிக்க வைத்தது ஏன்?
வெடிபொருட்களுடன் சேர்த்து சிலிண்டரையும் வெடிக்க செய்தால் மட்டுமே மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கருதினோம். ஒரேநேரத்தில் வெடிபொருட்களுடன் சிலிண்டரையும் சேர்த்து வெடிக்க வைக்க திட்டமிட்டிருந்தோம். இதற்காக கோவையில் சில இடங்களையும் தேர்வு செய்து வைத்திருந்தோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 5 பேரின் போலீஸ் காவல் நேற்று மாலையுடன் முடிவடைந்ததால் அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: