புதன், 20 ஏப்ரல், 2022

சென்னை, ஓசூரில் புதிய விமான நிலையங்கள்

 மின்னம்பலம் : சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகத் தொழில் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை நடைபெற்று வரும் நிலையில் நேற்று (ஏப்ரல் 19) தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில் அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் போக்குவரத்தைக் கையாள்வதற்காக புதிய விமான நிலையம் அமைக்கும் பொருட்டு, தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இந்திய விமான ஆணையமும் இணைந்து தற்போதைய வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

விமானப் போக்குவரத்தில் எதிர்கால தேவையை எதிர்கொள்ளச் சென்னை அருகே ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையத்தை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நான்கு இடங்களை டிட்கோ நிறுவனம் தேர்வு செய்து சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது.

இந்த இடங்களை இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு பார்வையிட்டு அதன் சாத்தியக்கூறு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் தொழில்துறையில் வளர்ச்சி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா, தனி மனித வருவாய் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கு அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி தொழிற்சாலைகளுக்கான மையமாக இருப்பதால் ஓசூரில் ஒரு புதிய விமானம் நிலையம் அமைப்பதற்கு இப்பகுதியைச் சுற்றியுள்ள விமானப் போக்குவரத்து மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் சந்தை தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாத்தியக்கூறு உள்ள இடங்களை ஆய்வு செய்யுமாறு டிட்கோவை அரசு பணித்துள்ளது. இந்த அறிவுறுத்தலின்படி மேற்கண்ட ஆய்வை மேற்கொள்ள ஒரு ஆலோசகரைத் தேர்வு செய்யும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: