புதன், 20 ஏப்ரல், 2022

கொடநாடு வழக்கு சசிகலாவுக்கு அழைப்பு . எடப்பாடியின் நடுக்கம்

 மின்னம்பலம் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் கடந்த 2017 ஏப்ரல் 24ஆம் தேதி மர்ம கும்பல் புகுந்து கொள்ளையடித்ததோடு தங்களை தடுக்க முயன்ற எஸ்டேட்டு காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தனர். அடுத்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் விபத்தில் மரணம் போன்ற திடுக்கிடும் சம்பவங்கள் நடந்தன.
தமிழ்நாட்டு அரசியலில் மிகுந்த பரபரப்பை கிளப்பிய இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விசாரணை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் இந்தக் கொலை கொள்ளை சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். சசிகலா சிறையில் இருந்தார்.


திமுக ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தி மேலும் பலரை விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

ஆனபோதும் நீதிமன்றத்தின் அனுமதியோடு ஊட்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நாளை ஏப்ரல் 21 ஆம் தேதி சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சசிகலாவுக்கு இந்த விசாரணையில் பங்கேற்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

"கொடநாடு எஸ்டேட் பற்றி சசிகலாவுக்கு முழுமையான விவரங்கள் தெரியும். எடப்பாடி ஆட்சியில் இந்தக் கொலை கொள்ளை வழக்கு பற்றிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபோது அதில் பல விஷயங்களை தவிர்த்து விட்டதாக சந்தேகங்கள் எழுந்தன. மேலும் கொடநாடு எஸ்டேட்டில் திருடு போன பொருள்கள் என்ன, அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி சசிகலாவிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்கே இந்த விசாரணை" என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.

சில வாரங்களுக்கு முன் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள் தனிப்படை போலீசார். இதையடுத்து இப்போது சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே நாளை போலீசார் கொடநாடு விவகாரம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்கிறார்கள்.

இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரிப்பதற்கு தனிப்படை போலீசார் தயாராக இருக்கிறார்கள் என சில மாதங்களாகவே செய்திகள் வந்து கொண்டுள்ளன.

சசிகலாவிடம் கொடநாடு எஸ்டேட் பற்றியும் அதில் கொள்ளை போன பொருட்கள் பற்றியும் விசாரித்து முழுமையாக அறிந்து கொண்டபின் எடப்பாடியை விசாரித்தால்தான், அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்க முடியும் எனக் கணக்குப் போட்டிருக்கிறார்கள் போலீசார். அதனால்தான் சசிகலாவிடம் விசாரித்து தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்க தயாராகிறார்கள் வழக்கை விசாரிக்கும் போலீசார்.

இந்தப் பின்னணியில் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை என்ற தகவலை அடுத்து, எடப்பாடி தரப்பு டென்ஷன் ஆகி இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த வழக்கு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் வழக்கறிஞர் வட்டாரங்களில்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: