ஞாயிறு, 12 டிசம்பர், 2021

ஓஷோ ரஜ்னீஷ்! கட்டுப்பாடுகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தில் பெரும் உடைப்புகளை நிகழ்த்தியவர்

May be an illustration of 1 person and beard

Rajasangeethan  :  ஓஷோ ரஜ்னீஷ்ஷின் பிறந்தநாள் இன்று.
ஓஷோ யாரென கூகுளில் தேடிப் பார்க்காதீர்கள். இந்திய மதவாதத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். நம்பாதீர்கள்.
பின் யார்தான் ஓஷோ?
1960-களில் இந்தியாவின் சிந்தனை மரபில் ஒரு முக்கியமான எழுச்சி நேர்ந்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் ஓஷோ  ரஜ்னீஷ்.
ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின். 1931ம் ஆண்டு பிறந்தவர். தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
1960களில் இந்தியா முழுக்கப் பயணித்து பல  இடங்களில் உரைகள் ஆற்றினார். ஆன்மிகம் மட்டும் பேசாமல், அரசியல் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் இணைத்துப்  பேசினார். ரஜ்னீஷ்ஷின் சிந்தனைகள் பல, சர்ச்சைக்கு உரியவைகளாக இருந்தபோதும் மறுப்பதற்கான வாய்ப்பற்றதாக இருந்தன. ஏனெனில் அவர் பேசிய பெரும்பாலானவை அவருக்கு முன் உலக தத்துவத்தில் சிறந்து விளங்கிய மார்க்ஸ்,  நீட்சே, பிளாட்டோ முதலியவர்களின் கருத்துகள். அக்கருத்துகளை இந்தியச் சூழலுக்கு பொருத்தி ரஜ்னீஷ் பேசியதே மிகப்  பெரிய தரிசனமாக இருந்தது.
கட்டுப்பாடு நிறைந்த இந்தியச் சமூகத்தில் பெரும் உடைப்புகளை நிகழ்த்தினார் ரஜ்னீஷ். பல காலமாக இந்தியச் சமூகத்தில்  பூட்டி வைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் தெரிந்த உண்மைகளை பொதுவெளியில் போட்டு உடைத்தார். உதாரணமாக கடவுள், மோட்சம் என மதங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது ரஜ்னீஷ் இப்படி சொன்னார்:


'மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி. மரணத்துக்கு முன் உண்மையில் நாம்  வாழ்கிறோமா என்பதே கேள்வி’
மதங்கள் சொல்லி வந்து கொண்டிருந்த சால்ஜாப்புகள் உடைபட்டன. அதே நேரத்தில் ரஜ்னீஷ் மதங்களிலிருந்து மேற்கோள்  எடுக்கவும் தயங்கியதில்லை:
‘உன்னைத் தவிர யாராலும் உன்னை அழிக்க முடியாது. உன்னைத் தவிர யாராலும் உன்னை காப்பாற்றவும் முடியாது. நீதான் இயேசு. நீதான் யூதாஸ்.’
முக்கியமாக மனம் கையாளுவதை பற்றி அதிகம் பேசினார். அகங்காரமே நம்மை இயக்குகிறது என்கிற சிக்மண்ட்  ஃப்ராய்டின் பார்வையிலிருந்து கருத்துகளை முன் வைத்தார்:
‘அகங்காரம் உங்களுடைய எதிரி. உங்களுடைய நண்பன் இல்லை. அகங்காரம்தான் உங்களை காயப்படுத்தும்.  அகங்காரம்தான் உங்களை கோபப்படுத்துகிறது. பொறாமைப்பட செய்கிறது. போட்டியிட செய்கிறது. வன்முறையாக்குகிறது.  அகங்காரம்தான் பிறருடன் உங்களை தொடர்ந்து பொருத்தி பார்க்கச் செய்து துயருறச் செய்கிறது.’
என்றார்.
உறவுகள் கையாளுவதையும் மிக எளிமையாக விளக்கினார். உறவுக்கிலேசம் ஏற்ப்டுகையில் உடனே நான் ஓடி படிப்பது ஓஷோவைத்தான். நீங்கள் மனதுக்குள் அடுக்கி வைத்திருக்கும் சொப்புகளை படாரன் கலைத்துப் போட்டு உண்மையை வெளிப்படுத்தி விடுவார்.
‘எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். விட்டுச் செல்லும் தன்மையை பிறருக்கு கொடுங்கள். கடவுள் ஒரு நாளில்  லட்சக்கணக்கான பூக்களை கட்டாயப்படுத்தாமல்தான் மலரச் செய்கிறார்.'
தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் ஏற்க முடியாததாக இருக்காது.
காதல் மற்றும் உறவுகளில் நாம் கொள்ளும் உடைமை மனநிலையையும் போட்டு உடைக்கிறார்:
‘உங்களுக்கு ஒரு மலர் பிடித்தால் அதை பறிக்காதீர்கள். நீங்கள் பறித்தால் அது இறந்துவிடும். பிறகு அதை நீங்கள் ரசிக்க  முடியாது. எனவே ஒரு மலர் பிடித்தால், அதை அதுவாகவே இருக்க விடுங்கள். அன்பு என்பது பாராட்டுதல். உடைமை கொள்ளுதல் கிடையாது.’
சிறைக்குள் அதுவரை அவதிப்பட்டிருந்த மக்களுக்கும் மனங்களுக்கும் சிறகுகள் முளைத்தன. ஒரு பெரும் சுதந்திர உணர்வு பற்றிக் கொண்டது.
இவற்றையும் தாண்டி முக்கியமான அரசியல் நிலைப்பாடு ரஜ்னீஷ்ஷுக்கு இருந்தது.
'உங்களின் குற்றவுணர்ச்சிகளை அப்புறப்படுத்தவே நான் வந்திருக்கிறேன். உங்களை நீங்கள் திரும்ப நம்ப  வேண்டுமென்பதற்கே நான் வந்திருக்கிறேன். உங்களின் இருத்தலை நீங்கள் நம்பத் தொடங்கிவிட்டால், எந்த அரசியல்வாதியும் புரோகிதனும் உங்களைச் சுரண்டி அடக்க முடியாது. மனிதனை அச்சம் கொண்டே சுரண்டுகிறார்கள்.’
என மதத்தையும் அரசியலையும் ஒரே தட்டில் வைப்பார்.
தன் நிலைப்பாட்டை பற்றி விளக்குகையில் இப்படி குறிப்பிட்டார்:
”நான் ஒரு கலகவாதி. முற்றிலும் வேறு வகையை சேர்ந்த கலகவாதி. நான் எந்த அரசாங்கத்துக்கும் எதிரி கிடையாது. அரசாங்கம் என்கிற தேவைக்கு எதிரானவன். நான் நீதிமன்றங்களுக்கு எதிரானவன் கிடையாது. நீதிமன்றம் தேவைப்படும்  காரணத்துக்கு எதிரானவன். என்றேனும் ஒருநாள் மனிதன் மதரீதியான அரசியல்ரீதியான கட்டுப்பாடு ஏதும் இல்லாமல்  வாழ்வான்”
என்றார்.
கிட்டத்தட்ட anarchist எனச் சொல்லலாம். ஆனால் அவரின் கல்வி காலத்தில் கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டதாக அவரே குறிப்பிடுகிறார்.
நேரடியாக அரசியல் கருத்துகள் வெளியிட  அவர் தயங்கியதில்லை. மகாத்மா காந்தி மற்றும் நேருவை பற்றி  கடும் விமர்சனங்கள் வைத்திருக்கிறார்.
இந்தியாவில் சோசலிசம் சாத்தியமில்லை எனக் கூறி, முதலாளித்துவம் வளர்ந்து அனைவரும் நாசம் செய்த பிறகுதான் சோசலிசத்துக்கு மக்கள் தயாராவார்கள் எனக் காரணம் சொன்னார்.
எல்லா  மதங்களையும் நிராகரித்தார். தியானம், சுதந்திர மனம், அன்பு முதலியவற்றையே அவர் போதித்தார். பாலுறவை பற்றியும்  வெளிப்படையாக பேசினார். அதனால் அவருக்கு ‘செக்ஸ் குரு’ எனக் கூடப் பெயர் சூட்டப்பட்டது.
தனிமனிதவாதத்தையும் அரசியலற்றதன்மையையும் அவர் வளர்த்தெடுத்தார் எனக் குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அவர்தான் கம்யூனிசத்தின் 'கம்யூன்' வாழ்க்கையையும் இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்.
இன்றைய சாமியார்கள் போல் லிங்க கோபுரத்தையும் நந்தி சிலைகளையும் வழிபட்டு இந்து மதத்துக்கு கூட்டிச் செல்லும் வழியை அவர் செய்யவில்லை. இந்து மதத்திலிருந்து வெளியேற்றும் வேலையைச் செய்யவில்லை. அவர் இங்கிருப்பவர்களை ஜென் தத்துவத்தை நோக்கி அழைத்தார். பற்றற்று பவுதிக வாழ்க்கையில் வாழ்வது எப்படி எனக் கற்றுக் கொடுத்தார்.
சமூகமும் மனமும் சரியான வழியில் ஓர்மைப்படும் வழிகளை அவர் கையளித்தார். ஓஷோவின் ஆன்மிகப் பயணம் தொடங்கிய விதமே பற்றறுத்தலின் தொடக்கம் என அவரே விவரித்திருந்தார். சிறு வயதில் அவரின் தாத்தா மரணமுறுவதை அருகே இருந்து அணு அணுவாக பார்த்து தாத்தாவிம் வதையினூடாக பயணித்து இருத்தலின் அர்த்தத்தைத் தேடத் துவங்கியதாக விளக்குவார். அந்தத் தேடல் இன்றைய சாமியார்களைப் போல் காவியில் முடியாமல் சமூகப் பொருளாதார வேறுபாடுகளினூடாக உள்ளொளிக்கு புத்தனைப் போல் இட்டுச் சென்றது.
உடைத்தலே ஓஷோ. அவர் பேசுவதற்கு முன்னாலேயே அவரது கண்களே உடைத்தலைத் தொடங்கிவிடும். நம்பவில்லை எனில் அவரது பேட்டிகளைப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை: