திங்கள், 13 டிசம்பர், 2021

கணவரின் வழியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ... பெண்களுக்கு ஆர் எஸ் எஸ் வகுப்பெடுத்த சி பி எஸ் இ 10-ம் வகுப்பு வினாத்தாள்

rahul-gandhi-slams-cbse-for-controversial-passage-in-class-10-exam

hindutamil.in  : கணவரின் வழியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ... பெண்களுக்கு ஆர் எஸ் எஸ் வகுப்பெடுத்த சி பி எஸ் இ  10-ம் வகுப்பு வினாத்தாள்: ராகுல் காந்தி, பிரியங்கா, சோனியா காந்தி சாடல்
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் கேள்வித்தாள் முற்றிலும் அருவருப்பாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ் பாஜக சிந்தனையில் இருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தையும், மன உறுதியையும் குலைத்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மக்களவையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாளில் பெண்களைப் பற்றிய பிற்போக்குக் கண்ணோட்டத்தில் இருக்கும் கேள்வி குறித்த விவாகரத்தை மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் எழுப்பி மத்திய அரசிடம் இருந்து விளக்கம் கோரினார்.


காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கடுமையாகச் சாடியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சிபிஎஸ்இயின் பெரும்பாலான கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்தது. அதிலும் ஆங்கிலப் பாடத்தில் இருந்த புரிந்து விடையளிக்கும் பத்தி (காம்ப்ரிஹென்ஸன் பாராகிராப்) முற்றிலும் அருவருப்பாக இருந்தது.

ஆர்எஸ்எஸ், பாஜக திட்டத்தில் இருந்தது. இதுபோன்ற கேள்வி இளைஞர்களின் மன உறுதியையும், எதிர்காலத்தையும் அழித்துவிடும். குழந்தைகளே உங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படுங்கள். கடின உழைப்பு பலன் தரும். மதவெறி இல்லை” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு பெண்களைப் பற்றிப் பிற்போக்குத்தனமான கருத்துகளைப் போதிப்பது தெளிவாகத் தெரிகிறது. என்னால் நம்பமுடியவில்லை. உண்மையில், இந்த முட்டாள்தனத்தையா குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கிறோம். ஏன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இவர்கள் இடம் பெறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

ஆங்கிலப் பாடக் கேள்வியில், "20-ம் நூற்றாண்டில் குழந்தைகள் குறைவாக இருந்ததற்குப் பெண்ணியம்தான் அதற்கு காரணம். தந்தை எனும் வார்த்தைக்கு அதிகாரம் இல்லை. திருமணமான பெண்கள் வேலைக்குச் சென்று தங்களுக்கென அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.

பெண்களின் எழுச்சி குழந்தைகளின் மீதான கட்டுப்பாட்டை அழித்துவிட்டது. கணவரின் வழியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தாய், குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க முடியும். ஆண்களை அவர்களின் பீடத்திலிருந்து இறக்கியதன் மூலம் மனைவியும் தாயும், தங்களைத் தாழ்த்திக்கொண்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரியங்கா காந்தியும் பகிர்ந்துள்ளார்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாளில் பெண்கள் குறித்துப் பிற்போக்குத்தனமாக குறிப்பிடப்பட்ட கருத்துகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் இன்று கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் எழுப்பினார். இந்தக் கருத்துக்கு மோடி அரசு மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினார். இந்தச் சர்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய கேள்வித்தாளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்

கருத்துகள் இல்லை: