புதன், 15 டிசம்பர், 2021

மம்தா : நானே ஒரு பார்ப்பனர்தான்.. எனக்கு யாரும் நற்சான்றிதழ் தர தேவையில்லை..' கோவா தேர்தல்.. பிரசாரத்தில் ....

செல்லபுரம் வள்ளியம்மை : வடநாடு இந்து முஸ்லீம் வேறுபாடுகளை வைத்தே அரசியல் செய்வது என்று தீர்மானித்து விட்டது என்றெண்ணுகிறேன். ஆர் எஸ் எஸ் ஒருபுறமும் இஸ்லாமிய கட்சிகள் மறுபுறமும் தீனி போட்டு வளர்த்த மதவாத விஷ செடி இன்று நன்றாக செழித்து வளர்ந்து விட்டது போல தோன்றுகிறது இதுவரை பாஜகவும் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும்தான் பெரிதும் இந்த பாதையில் சென்றன. ஆனால் இப்போது ராகுல் காந்தியே தான் இந்து பார்ப்பனர் என்பதை கூறுகிறார் காங்கிரஸ் தேர்தல் காணொளியில் சம்ஸ்கிருத சுலோகம் வேற உச்ச குரலில் ஒலிக்கிறது கோவா தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜியும் தன்பங்கிற்கு தானும் ஒரு அக்மார்க் பார்ப்பனர் என்பதை பெருமையோடு பிரகடன படுத்துகிறார் ..சம்ஸ்கிருத சுலோகங்கள் வேற பாடுகிறார் . அதுவும் சுருதி சுத்தமாக முழங்குகிறார் ஆக கூடி வடநாடு தன்தலையில் தானே மண்ணை அள்ளி போடுவது என்று தீர்மானித்து விட்டது அந்த சுய நிர்ணய உரிமையை அவர்கள் பயன்படுத்தி கொள்ளட்டும் கண்விழித்த மாநிலங்கள் தஙகள் சுயநிர்ணய உரிமைகளை பயன்படுத்தி கொள்ளட்டும்

  Vigneshkumar  -  Oneindia Tamil :  கோவா: கோவா சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, தான் ஒரு பார்ப்பனர்  என்றும் பாஜக ஒன்றும் தனக்கு நற்சான்றிதழ் தர தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு தொக்கத்தில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது.
கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னர், பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகப் பரவலாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


ஒரு புறம் மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.   

அதேநேரம் மறுபுறம் திராணாமுல் காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்கம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளன. முதற்கட்டமாக அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் கோவாவில் கட்சியை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மம்தா. ஏற்கனவே, காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகி வருகின்றனர்.

இந்நிலையில், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 2 நாள் பயணமாக மம்தா பானர்ஜி கோவா சென்றுள்ளார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "கோவாவில் பாரதிய ஜனதா கட்சியை நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காகப் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நான் உங்களை எதிர்க்க வரவில்லை, வெளியாட்கள் யாரும் கோவாவைக் கட்டுப்படுத்துவதை நான் விரும்பவில்லை.

நான் பார்ப்பன  குடும்பத்தைச் சேர்ந்தவள்.  எனக்கு பாஜகவிடம் இருந்து ஒன்றும் நற்சான்றிதழ்கள் தேவையில்லை" என்று கடுமையாகத் தாக்கி பேசினார். அதேபோல மம்தா தனது ட்விட்டர் கணக்கிலும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் மம்தா பானர்ஜி இந்து பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவுக்கு எதிராக மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை மம்தா பதிவு செய்திருந்தார். ஏற்கனவே தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருந்த மம்தாவின் இமேஜை அது மேலும் உயர்த்தியது.

அடுத்தகட்டமாக 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதேநேரம் சமீப காலமாகக் காங்கிரஸ் கட்சியுடன் மம்தா சற்று முரண்பட்டே நிற்கிறார். சமீபத்தில் கூட இப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதேநேரம் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் காங்கிரஸ் இல்லாமல் தேசியளவில் எதிர்க்கட்சி கூட்டணியைக் கட்டமைக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை பேரணியில் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகத் தாக்கி பேசிய மம்தா, "ஒரு கட்சி பாஜகவைத் தோற்கடிக்க எதுவும் செய்யவில்லை என்பதற்காக மற்ற கட்சிகளும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நினைப்பது சரியல்ல. யாராவது பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்பினால், அவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி கோவாவுக்கு வருவது இது 2ஆவது முறையாகும். அப்போது பாஜக தொடர்ந்து பிரிவினைவாதத்தைப் பரப்பி வருவதாக விமர்சித்த அவர், பாஜக ஆட்சியிலுள்ள எந்த மாநிலத்திலும் பொதுமக்களால் நிம்மதியாக வெளியே வர முடியாது என்று விமர்சித்தார். மம்தா தேசியளவில் முக்கிய தலைவராக உருவெடுத்து வரும் நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை: