ஆனால் அதையும் தாண்டி கோவாவை சுற்றி மலைத் தொடர்களும், ஆறுகளும், அருவிகளும் இருப்பதை பெரும்பாலானோர் கண்டு கொள்வதில்லை.
நாங்கள் எங்கள் கோவா பயணத்தை கடல்,மலை என இரண்டாக பிரித்து கொண்டோம்.
முதல் மூன்று நாள் பாகா,பலோல்யம், அகோண்டா என்று கடற்கரைகளை ரசித்துவிட்டு பின்னர் மலைகளை நோக்கி நகர்ந்தோம்.
அதில் எங்களை கவர்ந்தது ஷிவம் அருவி.
மலையை தழுவியபடி கடல் மயக்கத்தில் இருக்க.... எங்கோ மலைமுகட்டில் இருந்து பாய்ந்துவரும் நீர் அருவியாய் கடலில் பாய்கிறது. மேலே அருவி- கீழே கடல்
ஒரே நேரத்தில் கடலிலும்,அருவியிலும் நீராடலாம். கடலை ரசித்தபடியே நீண்ட நேரம் அருவியில் குளித்தோம். கடலும் அருவியும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் காட்சியை என் வாழ்வில் முதன்முதலில் இப்போதுதான் காண்கிறேன்.
கோவா ஒரு அழகான ஊர்தான் ஆனாலும்...,
அழகுக்கு பின்னால் ஆபத்தும் உண்டு அல்லவா...?கோவா குறித்த தெளிவோ, புரிதலோ இன்றி முதன்முறை செல்பவர்கள் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுவீர்கள் என்பது உறுதி.
நாங்கள் ஒரு மாதம் முன்பே எங்கள் பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்தியதால் எந்த சீட்டிங்கிலும் சிக்காமல் தப்பித்து கொண்டோம்.
அப்படி அங்கு என்னதான் ஏமாற்று வேலைகள் நடக்கிறது...?
மது,மாது,சூது இந்த மூன்றில் எதிலொன்றிலாவது சிக்கி பணத்தை இழந்த சுற்றுலா வாசிகளின் அனுபவங்கள் மிக நீண்டது.
தெம்மாடிகள் நிறைந்த ஊர் கோவா என்றால் அது மிகையாகாது. என்னன்ன விதத்தில் ஏமாற்றுவார்கள்...? அவர்கள் விரிக்கும் வலையில் சிக்காமல் தப்பித்து கொள்வது எப்படி..? கோவா செல்பவர்கள் தன் பயண திட்டத்தை எப்படி அமைத்து கொள்ள வேண்டும்..!?
கோவா தில்லுமுள்ளு- பகுதி 1
ரயிலிலோ விமானத்திலோ கோவா சென்று அங்கு தங்கும் நாட்களுக்கு Self drive காரை வாடகைக்கு எடுத்து கொள்வது அனேகரின் வழக்கம்.
இதற்காக பல நிறுவனங்கள் அங்கு இருக்கின்றது.
அங்கு பிராதான ரயில் நிலையம் மட்கான். ரயிலைவிட்டு இறங்கி வெளியே வந்தாலே பலர் நம்மை சூழ்ந்து கொள்வார்கள். வாடகைக்கு கார் தரோம். என்ன மாதிரி கார் வேணும் என்று..!?
நாங்கள் ஆறு பேரும் மாருதி இகோ கார் எடுக்கலாம் என்கிற திட்டத்தில் இருந்தோம். இகோ கார் ஒரு நாளைக்கு 2000 என்றார் ஒருவர். இன்னொருவர் 1600 க்கு தரேன் என்றார். இறுதியாக 1500 ல் உறுதியாக இருந்தார்கள்.
அவர்களுக்குள் பேசி வைத்துகொண்டார்கள். எனக்கு ஓரளவு இந்தி தெரியுமாதலால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது புரிந்தது. (மதராசி காரன். விலையை வெட்டாதிங்க.வேறவழியில்லை அவனுங்க நம்மகிட்டதான் கார் எடுத்தாகனும்)
எங்களுக்கு ஆறு நாட்களுக்கு கார் தேவை.சொல்லிவச்சது போலவே பத்து பேரும் இறுதியில் ரூ.1500 ஒரே வாடகைதான் சொன்னாங்க. அத்தனை பேரும் ஒரே காரைதான் தன் சொந்த கார் என்று கைகாட்டினார்கள். என்ன ஆச்சர்யம்..? ஒரு காருக்கு பத்து ஓனரா..??
மண்டையை மறைச்சவனுக்கு கொண்டையை மறைக்க தெரியல... அந்த கார் பின்புறம் இரண்டு தொலைபேசி எண் இருந்தது. அதை பதிவு செய்து தனியாக சென்று அந்த எண்ணுக்கு அழைத்தேன்.
சற்று நேரத்தில் அதன் உரிமையாளர் ஜான்பாய் வந்து சேர்ந்தார். நல்ல மனிதர். இஸ்லாமியர். நாங்கள் மூன்றுபேர் இஸ்லாமியர் என்பதை தெரிந்துகொண்டு சலாம் சொல்லிவிட்டு உண்மையை பேசினார்.
"என்கிட்ட ஏழு டைப் கார் இருக்கு. என்னை போன்று சொந்த கார் வைத்திருப்பவர்கள் இங்கு வரமாட்டோம். எல்லாம் இந்த ஏஜண்டுகள் பார்த்து கொள்வார்கள். என் காருக்கு ஒருநாள் வாடகை 1000 ரூபாய்தான். அதிகம் வைத்து பேசும் தொகை அவர்களுக்கு. நீங்கள் முதலிலேயே என்னை கூப்பிட்டிருந்தால் நேரடியாக 1000 ரூபாய்க்கு தந்திருப்பேன் என்றவர் 1200 ரூபாய்க்கு சம்மதித்தார். அதிகப்படியான 200 ரூபாய் அந்த ஏஜண்டுகளுக்கு கொடுத்தாக வேண்டுமாம்.
நீங்களோ உங்கள் நண்பர்களோ கோவா வந்தால் இந்த எண்ணிற்கு நேரடியாகஎன்னை கூப்பிடுங்க. ஏஜண்ட்ங்க கிட்ட பேச்சே கொடுக்காதிங்க. கமிஷன் இல்லாமல் என் வாடகை மட்டும் வாங்கிக்கறேன். கோவாவில் என்ன உதவி என்றாலும் என்னை எப்போதும் கூப்பிடுங்க என்றார்.
அதுபோல் ஏஜண்டுகள் மூலம் கார் எடுக்கும்போது கொடுக்கும் அட்வான்ஸ் பணத்தை ஏதாவது காரணம் சொல்லி திரும்ப தர மாட்டார்களாம். இன்னும் அழுத்தமாக நாம் கேட்டால் ஏஜண்டுகள் சூழ்ந்துகொண்டு நம்மை மிரட்டுவார்களாம். நாமும் ரயிலுக்கு நேரமாச்சு போனா போகட்டும் என்று அட்வான்ஸ் பணத்தை வாங்காமலேயே கிளம்பி விடுவோம்.
ஆகவே... கோவா செல்ல விரும்பும் நண்பர்களே... உங்களுக்கு Self drive கார் தேவையெனில்.இந்த புகைபடத்தில் இருக்கும் ஜான்பாய் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். மனசாட்சியோடு நமக்கு உதவி செய்வார்.
ஜான்பாயிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கோவாவின் உச்கட்ட சீட்டிங் ஒன்றை அவர் ரகசியமாக சொன்னார். கேட்கவே மிக அதிர்ச்சியாக இருந்தது.... அது...?
(நாளை...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக