தினமலர் : கொழும்பு : அதானி நிறுவனத்தின் எரிசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், இந்தியா உடனான இலங்கையின் வர்த்தக உறவு பாதிக்கப்படும் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவியபோது, அதிபராக இருந்தவர் ரனில் விக்ரமசிங்கே. அவரது ஆட்சியின்போது, இந்தியாவுடன் எரிசக்தி, வேளாண்மை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் மேற்கொண்டு பொருளாதார நிலையை சீரமைத்தார்.
இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில், இலங்கை அதிபராக அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார்.
தற்போதைய அதிபரான அவர், கடந்த பிப்., 13-ல் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம் சார்பாக, இலங்கையின் மன்னார் உட்பட இரண்டு இடங்களில் அமைய இருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை ரத்து செய்தார். அதானி குழுமத்தை விட, பாதி விலைக்கு மின்சாரம் தருவதற்கு வேறு நிறுவனங்கள் டெண்டர் வழங்கியதாகவும் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, ஏற்கனவே 42.80 கோடி ரூபாய் செலவிட்ட நிலையில், தன் 3,425 கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தி திட்டத்தை கவுரவமாக திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்தது.
இதையும் படிங்க
பதவி நீக்கத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
பதவி நீக்கத்தை ரத்து செய்தது நீதிமன்றம்
அதிபர் அனுராவின் இந்த செயலுக்கு, முன்னாள் அதிபர் ரனில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏப். 5-ம் தேதியன்று, நம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். இந்த சூழலில் ரனில் விக்ரமசிங்கே அளித்த பேட்டி:
இலங்கை இன்னமும் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடவில்லை. என் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை தற்போதைய அரசு நிறைவேற்றாவிட்டால், மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். சர்வதேச முதலீட்டாளர்கள், இரு தரப்பு கடன் வழங்குபவர்கள் வாயிலாக ஏற்படும் மறுகட்டமைப்பு திறனை கொண்டே சர்வதேச நிதியத்தில் உத்தரவாத கடன் பெற முடியும்.
எனவே, இந்தியாவுடன் அதிகபட்ச அளவிலான பொருளாதார ஒத்துழைப்பை பேணுவதே இலங்கைக்கு நல்லது. ஆனால், என் ஆட்சியில் துவங்கியவற்றை எல்லாம் இன்றைய அரசு முற்றிலுமாக கைவிடுவது வருத்தமளிக்கிறது.
அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் எந்த காரணமும் இல்லை. இது, இந்தியாவின் மற்ற அனைத்து முதலீடுகளிலும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
1 கருத்து:
ஊழ் அம்பு வீழா நிலத்து
https://tamilmoozi.blogspot.com/2025/03/blog-post_24.html
கருத்துரையிடுக