![]() |
Ravishankar Ayyakkannu : நீயா நானாவில் கலந்து கொள்ளப் போகிறேன் என்று சொன்ன போதே "நமக்கு எதுக்குப்பா இந்த அரசியல் வம்பு எல்லாம்?
இது தேவையா? பார்த்துப் பேசுப்பா" என்று தான் வீட்டில் சொன்னார்கள்.
"இது பதிவு செய்து edit பண்ணி ஒளிபரப்புகிற நிகழ்ச்சி. நாம வில்லங்கமா பேசினாலும் அவங்க அதையெல்லாம் நீக்கிட்டுத் தான் ஒளிபரப்புவாங்க.
நம்மைவிட TVக்குத் தான் இதில் risk அதிகம்"னு சொல்லித் தான் அவங்களைச் சமாதானப்படுத்தினேன். ஆனால், முழு நிகழ்ச்சியே ஒளிபரப்பப்படாமல் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஏனென்றால், அப்படித் தடை செய்யப்படுகிற அளவுக்கு அங்கு எதுவும் பேசப்படவில்லை. எல்லாமே ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக ஊடகங்களிலும் எல்லோரும் அடித்துத் துவைத்துக் காயப் போட்ட அதே வாதங்கள்தாம்.
மும்மொழிக் கொள்கையை ஆதரிப்போர் vs எதிர்ப்போர் என்கிற இந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு மட்டுமே கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு மணி நேரங்களுக்கு நீண்டது. இவ்வளவு பதிவு செய்து அதில் 45 நிமிடங்கள் அளவுதான் ஒளிபரப்புவார்கள் என்பதால், அங்கு என்னவெல்லாம் பேசப்பட்டது என்று வெளிப்படுத்துவது முறையாக இருக்காது. நீயா நானாவில் பேசப் போகிறோம் என்பதை விட அந்த நிகழ்ச்சி எப்படி உருவாக்கப்படுகிறது என்று காணும் ஆர்வத்திலேயே நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் நேரலையில் பேச வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், கோபி ஒவ்வொருவருக்கும் தேவைக்கும் அதிகமான நேரம் பேச வாய்ப்பு தந்தார். இரு தரப்பு கருத்துகளுக்கும் செவி சாய்த்து நடுநிலையாகவே நிகழ்ச்சியை நடத்திச் சென்றார். குறிப்பாக, தீவிர அரசியல் பேசுவது நீயா நானா வழக்கத்திற்கு மாறானது என்பதால், பொதுமக்கள், பெற்றோர் பார்வையில் இருந்து இக்கொள்கையைப் பற்றிய பார்வைகளைப் பெற முயன்றார்.
பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து கூட இப்போதும் viral videos சுற்றி வருகின்றன. அப்படி காலத்திற்கும் நிலைக்கக்கூடிய ஓரிரு மணித்துளிப் புரிதல்களைப் பதிவு செய்யவே கோபி பெருமுயற்சி செய்தார். ஒருவர் தவறான கருத்தைக் கொண்டிருந்தாலும் அவருக்கு உரிய விளக்கத்தைத் தருவதன் மூலம் அவருடைய கருத்தை மாற்றிக் கொள்ள முன்வருகிறாரா என்று பொறுமையாகப் பேசிப் பார்த்தார். இது நிகழ்ச்சியில் பங்குகொண்ட ஒருவருக்காக என்பதை விட, அவரைப் போன்ற கருத்துடைய இலட்சக்கணக்கான பார்வையாளர்கள், பெண்கள், இல்லத்தரசிகளின் கருத்தில் ஒரு தெளிவு ஏற்படுத்த இந்த அணுகுமுறை மிகவும் உதவியாக இருக்கிறது.
இந்த வீச்சுதான் நிகழ்ச்சி தடைபடக் காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் முழுக்க நிகழ்ச்சி பதிவு செய்ய இலட்சக்கணக்கில் செலவாகும். விஜய் டிவியே விளம்பரங்களை வெளியிட்டது என்பதால் அவர்கள் ஒப்புதலுடன்தான் நிகழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டிருக்கும். நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தில் பிரச்சினை என்றால் கூட எப்படி வேண்டுமானாலும் edit செய்து ஒளிபரப்பியிருக்க முடியும். அதையும் தாண்டி இந்நிகழ்ச்சி இதுவரை வெளியாகவில்லை என்பதுதான் கவலைக்குரியதாக உள்ளது.
இதே போன்ற உரையாடல் நிகழ்ச்சிகளை தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பிற மொழிகளில் முயன்றதாகவும் தமிழில் உள்ளது போல ஒரு செறிவான, முற்போக்கான உரையாடல் சூழல் அச்சமூகங்களில் இல்லையென்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறினார். சாதி, சடங்குகள் போன்ற பல்வேறு உணர்வுப்பூர்வமான விசயங்களில் தமிழ்நாடு ஒரேடியாக முற்போக்குப் பாய்ச்சலை நிகழ்த்திவிடவில்லை என்றாலும், அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கான களமாவது இங்கு இருக்கிறது.
இவ்வாறான நிகழ்ச்சிகள் சன் டிவி, கலைஞர் டிவியில் வந்தால் அது கட்சிக்காரங்க நிகழ்ச்சி என்று பொதுமக்கள் குறைத்து மதிப்பிடலாம். எனவேதான், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் நடுநிலையாகப் பார்க்கப்படுகிற விஜய்டிவியில் ஒளிபரப்பாவது முக்கியமானதாக இருக்கிறது.
ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி எதிர்ப்புகளைச் சந்திப்பது வேறு. ஒளிபரப்பாவதற்கு முன்பே இப்படித் தடைசெய்யப்படுவது வேறு. இனி ஒவ்வொரு தலைப்பைப் பற்றியும் அவர்கள் யோசிக்கும்போது, வெளியில் இருந்து அழுத்தம் வருவதற்கு முன், இதெல்லாம் பேசத்தான் வேணுமா, நிகழ்ச்சி வெளிவராவிட்டால் என்ன செய்வது என்று தங்களைத் தாங்களே தணிக்கை செய்து கொள்ளத் தொடங்குவார்கள். இதுதான் பாசிசத்தை விடப் பெரிய துயரமாக இருக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக