
செபாஸ்டியன் என்பவரை முன்னிறுத்தி, மிருதங்கம் செய்யும் கலை, மிருதங்கம் செய்பவருக்கும் வாசிப்பவருக்கும் இடையிலான உறவு, வாசிப்பவர் கொண்டாடப்படும் நிலையில், செய்பவர் ஒடுக்கப்பட்டவராக, அங்கீகாரமற்றவராக இருப்பது ஆகியவை குறித்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தார் டி.எம். கிருஷ்ணா.
இந்தப் புத்தகம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதியன்று சென்னையிலுள்ள கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷனில் உள்ள ருக்மிணி அரங்கத்தில் வெளியிடப்படுவதாக இருந்தது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வரலாற்றாசிரியர் ராஜ் மோகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.

இந்த நிலையில், இந்தப் புத்தகத்தை வெளியிட கொடுக்கப்பட்டிருந்த அனுமதியை கலாக்ஷேத்ரா ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக, டி.எம். கிருஷ்ணாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “இது ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, சமூக ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே அனுமதிக்க முடியாது.
இன்றைய செய்தித் தாள்களில் வெளிவந்த புத்தக மதிப்புரைகளில் சில பகுதிகளைப் பார்த்தால், இந்தப் புத்தகம் சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டுச் செல்வது தெரிகிறது. மேலும் நிறைய அரசியல் கருத்துகளும் உள்ளன. புத்தக வெளியீட்டு விழாவிற்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்கொண்டபோது, இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது.
ஆகையால் புத்தக வெளியீட்டு விழாவிற்காக எங்கள் அரங்கத்தை பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்கிறோம்” எனக் கூறப்பட்டிருந்தது.

“இந்த நிகழ்வு என்பது மிருதங்கம் செய்பவர்களைக் கொண்டாடும் நிகழ்வு. இதற்கு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது. இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்பவர்களின் நிதர்சனம் குறித்துப் பேசுகிறது. நீங்கள் நாதம், நாதம் என்று சொல்கிறீர்களே.. அந்த நாதம் மாட்டைக் கொன்று அதன் தோலை எடுத்து மிருதங்கம் செய்தால்தான் கிடைக்கும். இந்த வேலையைச் செய்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?” எனக் கேள்வி எழுப்புகிறார் டி.எம். கிருஷ்ணா.
தற்போது புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில் உள்ள அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
“இந்தப் புத்தகத்திற்காக நான் நான்கு வருடங்கள் வேலை பார்த்தேன். மிருதங்கம் செய்வது மிகவும் கடினமான காரியம். மாட்டைக் கொல்லலாமா என்று நீங்கள் பேசும்போது, மாட்டைக் கொன்றால்தான் மிருதங்கம் கிடைக்கும் என்ற நிதர்சனத்திற்கு என்ன பதில்? இனிமேல் மிருதங்கமே வேண்டாம் என முடிவெடுத்துவிடப்போகிறோமா? மிருதங்கம் செய்யும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது” என்றார் அவர்.
இந்த விவகாரம் தொடர்பாக கலாக்ஷேத்ராவின் கருத்தை அறிய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
bbc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக