புதன், 29 ஜனவரி, 2020

அரசு- குடிமக்கள்: இரண்டாய் பிரிந்த குடி-அரசு தின கொண்டாட்டம்!... குடியரசு தின செய்தி பாசிசத்தின் வீழ்ச்சி ?

மின்னம்பலம் : ராஜன் குறை அரசு- குடிமக்கள்: இரண்டாய் பிரிந்த குடி-அரசு தின கொண்டாட்டம்!குடியரசு தின கொண்டாட்டம் என்றாலே ராணுவ அணிவகுப்புதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை வானத்தில் பல வித்தைகள் காட்டும். புதிய பீரங்கிகள் ஊர்வலத்தில் பவனி வரும். ஜனாதிபதி ராணுவ அணிவகுப்பின் மரியாதையை ஏற்றுக்கொள்வார். தேசிய கொடியை ஏற்றிவைப்பார். சர்வதேச அரங்கிலிருந்து ஏதோவொரு தேசத்தின் தலைவர் விசேஷ விருந்தினராக கலந்து கொள்வார்.
குடியரசு என்பதன் பொருள் குடிமக்களின் அரசு என்பதுதான். ஆனால் இந்த கொண்டாட்டங்களில் அரசு ராணுவமாகவும், ஜனாதிபதி பிரதமராகவும், அரசு நிர்வாகிகளாகவும் வெளிப்பட்டு சர்வதேச விருந்தினர் வருகை, பார்வையிடல் என்று அரசு தன்னை கொண்டாடிக்கொள்ளும் விழாவாகவே நிகழும். குடிமக்கள் சார்பாக கலையம்சத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பாகவும் வரும். அதில் கலைஞர்கள், பெரும்பாலும் நாட்டுப்புறக் கலைஞர்கள் காட்சிப்பொருள்களாக பங்கேற்பார்கள்.

குடிமக்கள் கொஞ்சம் பேர் இந்த அணிவகுப்புகளின் பார்வையாளர்களாக இருப்பார்கள். மாநில தலைநகரங்களிலும் அணிவகுப்புகள் நடக்கும். பள்ளி கல்லூரிகளிலும் கொடி ஏற்றுவார்கள். மிட்டாய்கள் தருவார்கள். பொதுவாக நிறுவனங்கள் சார்ந்துதான் கொண்டாட்டம் நடக்கும். தொலைக்காட்சி வந்த பிறகு பொதுமக்கள் வீட்டில் தொலைகாட்சி மூலம் புதுடெல்லியில் நிகழும் அணிவகுப்பை பார்க்கும் வாய்ப்பு உருவானது. பொதுவாக அரசு கொண்டாட மக்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள் எனலாம். ஆனால் அரசு என்பதே ஒட்டுமொத்த மக்களின் உருவகம்தான் என்பதால் மக்கள் பெருமிதப் பட்டுக்கொள்ளலாம் என்பது கருத்து.

இந்த ஆண்டு குடியரசு தினத்தின் முக்கியத்துவம் என்ன?
குடியரசு தினம் என்பது அரசியல் நிர்ணய சட்டம் எழுதப்பட்டு அது இந்த நாட்டினை வழிநடத்தும் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறிக்கிறது. இந்தியா என்ற பெயரில் ஒரு புதிய நாடு 1947ஆம் ஆண்டு உருவாகி, அதன் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இணைந்து விவாதித்து நாட்டின் அரசியல் எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என முடிவு செய்து வகுத்த சட்டம் அது. ஒருவகையில் சொன்னால் இந்தியக் குடியரசு என்பதே அந்த அரசியல் நிர்ணய சட்டம்தான்; அதன் ஆட்சிதான் என்றால் மிகையாகாது.

கடந்த எழுபது ஆண்டுகளில் நிகழாத ஒரு முக்கிய பிரச்சினை இந்த ஆண்டு நிகழ்ந்தது. அந்த அரசியல் நிர்ணய சட்டத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா அரசால், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. சிட்டிசன் அமெண்ட்மெண்ட் ஆக்ட், சி.ஏ.ஏ என்று அழைக்கப்படும் குடியுரிமை திருத்த சட்டம்தான் அது. அந்த சட்டம் பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர்களை தவிர்த்து, குறிப்பிட்ட ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்தது.
முதல் முறையாக குடியுரிமையையும், மத அடையாளத்தையும் இணைத்ததன் மூலம் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் அடிப்படை தரிசனமான மதச்சார்பின்மையை குழிதோண்டிப் புதைத்தது. பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகள் கடுமையாக எதிர்த்தாலும், பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் ஆளும் கட்சி இந்த சட்ட சீர்திருத்தத்தை நிறைவேற்றி விட்டது. அதன் காரணமாக இந்தியாவின் கான்ஸ்டிடியூஷன் என்ற அரசியல் நிர்ணய சட்டம் சீர்குலைக்கப்பட்டுவிட்டது.

இந்த சட்டம் அடிப்படை தரிசனத்திற்கு எதிராக இருக்கிறது என வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் பின்னணியில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய புதிய முயற்சிகளும் இணைந்திருப்பதால் இது சிறுபான்மை இனத்தவரை, குறிப்பாக இஸ்லாமியர்கள் பலரை, இரண்டாம் தர குடிமக்களாக அகதிகளாக மாற்றும் நிலையை உருவாக்கும் என்பதே அனைவரின் அச்சமாகவும் இருக்கிறது. இதனால் நாடெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். பல மாநில சட்டசபைகள் இந்த சட்டத்தை ஏற்க முடியாது என தீர்மானம் போட்டுள்ளதும் ஒரு புதிய சட்டச் சிக்கலை, நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாமிய மிலியா இஸ்லாமிய, ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் ஆகிய இடங்களில் போராடும் மாணவர்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டில்லியில் ஷாஹின்பாக் என்ற இடத்தில் பெண்கள் தொடர் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு விருந்தினர் தேர்வு!
எரியும் நெருப்பில் எண்ணையை விட்டாற்போல இந்த ஆண்டு வெளிநாட்டு விருந்தினரை தேர்ந்தெடுத்துள்ளார் பிரதமர் மோடி. அந்த விருந்தினர் சென்ற ஆண்டு பிரேசில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போல்சனாரோ. இவர் இனவெறி, ஆணாதிக்க மனப்போக்கு ஆகியவற்றிற்காக கடுமையாக கண்டிக்கப்பட்டவர். அதைவிட பயங்கரமானது பிரேசிலில் உள்ள மழைக்காடுகள் துரிதமாக பெருநெருப்பில் அழிக்கப்பட துணை புரிந்தவர் என்பது. அறிவியலாளர்கள் பலர் புவி வெப்பமடைந்துவரும் நிலையில் பிரேசில் மழைக்காடுகளே உலகின் நுரையீரலாக உள்ளன என்று கூறியுள்ளனர். ஆனால் கார்ப்பரேட் நலன்களுக்கு அந்த காடுகள் பிடிக்கவில்லை. அந்த இடத்தில் சுரங்கம் தோண்டுதல், கார்ப்பரேட் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்ளவே விரும்புகின்றன.
அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிபர் டிரம்ப்பையும், போல்சனோராவையும் ஆதரிக்கின்றன. அதனால் காட்டினை துரிதமாக அப்புறப்படுத்த தீ உதவட்டும் என்பதே போல்சனாரோவின் எண்ணம் என உலகம் கடுமையாக குற்றம் சாட்டுகிறது. அவர் அதைக்குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. இத்தகைய மக்கள் விமர்சனங்களை மதியாத உள்ளம், இந்தியாவில் அதே உள்ளத்துடன் செயல்படும் நரேந்திர மோடியை கவர்ந்ததில் வியப்பில்லை. பிரேசில் நாட்டில் மக்கள் எதிர்ப்பை சந்தித்துவரும் வலதுசாரியும், பிற்போக்காளருமான போல்சனரோ இந்தியாவில் மக்கள் எதிர்ப்பு தீயாக பரவி வரும் நேரத்தில் வருவதுதான் எவ்வளவு பொருத்தமானது என மோடியே வியந்திருக்கலாம்.
குடிமக்களின் கொண்டாட்டம்

புதுடெல்லியில் டிசம்பர் 11 ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதிலிருந்து ஷாஹின்பாக் என்ற இடத்தில் போராட்டம் துவங்கியது. டிசம்பர் 15ஆம் தேதி ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலை கழகத்தில் போலீஸும், குண்டர்களும் புகுந்து போராடும் மாணவர்களை கடுமையாகத் தாக்கினர். நூலகத்தினுள் புகுந்து சேதம் விளைவித்தனர். இந்த சம்பவத்தினை ஒட்டி ஷாஹின்பாக்கில் அதனூடாக செல்லும் நெடுஞ்சாலையை மறித்து பெண்கள் தர்ணா போராட்டம் துவங்கினர்.
இரவும் பகலும் பெண்கள் மாறி மாறி அமர்ந்து தொடர் போராட்டத்தை 43 நாட்களாக நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அங்கு சென்று போராடும் பெண்களுடன் பங்கேற்று வருகிறார்கள். ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலைகழகம் இங்கிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில்தான் உள்ளது. பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் சாலையின் ஒருபுறத்தை பகல் நேரத்தில் மறித்து பல்வேறு போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஷாஹின்பாக், ஜாமியா பல்கலைகழகம் ஆகிய இரு இடங்களிலும் போராட்டம் எந்த ஒரு அமைப்பாலும், கட்சியாலும் ஒருங்கிணைக்கப் படவில்லை. மெரீனா ஜல்லிகட்டு போராட்டம் போல தானாக சேர்ந்த கூட்டத்தை பலர் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள். இந்த இரு இடங்களிலும் மக்கள் குடியரசு தினத்தை கொண்டாட முடிவு செய்தனர். அதுவே குடிமக்கள் கொண்டாடும் குடியரசு தினமாக டெல்லியில் நிகழ்ந்தது.
ஜாமியாவிலும் சரி, ஷாஹின்பாக்கிலும் சரி மக்கள் சாரி சாரியாக மூவர்ண தேசிய கொடியை ஏந்தி வந்தனர். கன்னங்களில் தேசிய கொடியை வரைந்துகொண்டனர். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை அவ்வாறு அணிதிரண்டனர். அனைவர் வாயிலும் “ஆஸாதி!” என்ற முழுக்கம் இருந்தது. “ஜெய் ஹிந்துஸ்தான்” என்றும் முழங்கினர். ஜாமியா நூலகத்தை தாக்கியதால் அங்கே நடைபாதையில் நூலகம் அமைத்து “Read for Revolution’ என்ற பதாகையுடன் நூல்களை அடுக்கி வைத்து பலரும் அமர்ந்து படித்தனர்.

ஷாஹின்பாக்கிலும் இதே போல ஒரு நூலகம் அமைந்திருந்தது. தெருவெங்கும், சுவரெங்கும் வண்ண ஓவியங்களை தீட்டியவண்ணம் உள்ளனர். ஆங்காங்கே மெகாஃபோனை பிடித்துக்கொண்டு சிறு கூட்ட த்திற்கு நடுவே பாடுவதும், கோஷங்கள் எழுப்புவதுமாக இருந்தனர். ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸின் “ஹம் தேக்கேங்கே” என்ற பாடல் பல இடங்களிலும் ஒலித்தது. பல இடங்களில் மஹாத்மா காந்தியும், அம்பேத்கரும் அருகருகே காணப்பட்டனர். பகத்சிங், மெளலானா ஆசாத், ரோஹித் வெமுலா என பலரும் வரையப்பட்டிருந்தனர்.
குழந்தைகளும் வரைகின்றனர். பெற்றோரின் தோளில் ஏறி “ஆஸாதி” எனக் கூவுகின்றனர். முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து மதத்தவரும் இணைந்து பங்கேற்கின்றனர். வண்ண பலூன்கள், தேசிய கொடிகளுக்கு இடையே பாதையை அலங்கரிக்கின்றன. “NO CAA/ NRC/ NPR” என்ற கோஷமும் எல்லா இடங்களிலும் வரையப்பட்டும், எழுதப்பட்டும், பாடப்பட்டும், முழங்கப்பட்டும் வருகின்றன.

ஒருநாள் பார்ப்போமே...பார்ப்போமே
ஹைதராபாத் பல்கலைகழகத்தில் நான்காண்டுகளுக்கு முன்னால் ஜாதி ஒடுக்குமுறைக்கு தன் எதிர்ப்பை காட்ட தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவன் ரோஹித் வெமுலாவின் தாய் ஜனவரி 26 ஆம் தேதி காலை ஷாஹின்பாக்கில் அந்த ஊரின் சில மூதாட்டிகளுடன் இணைந்து கொடியேற்றினார். குஜராத் தலித் எம்பி ஜிக்னேஷ் மேவானி என பலர் பங்கு பெற்றனர். எதிர்வரும் புதுடெல்லி மாநில தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை வென்று பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தால் ஷாஹின்பாக்கை அப்புறப் படுத்துவேன் என்று அமித் ஷா அறைகூவல் விடுத்துள்ளார். மஹாத்மா காந்தியின் கொள்கைகளின் சாராம்சமே ஷாஹின்பாக்கில் வெளிப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பாசிச சக்திகள் பத்து சதவீத ஓட்டு வித்தியாசத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் மக்கள் மனதில் அவர்களால் இடம் பிடிக்க முடியவில்லை என்பதைத்தான் ஷாஹின்பாக் குடிமக்கள் குடியரசு தின கொண்டாட்டம் உணர்த்துகிறது. நாடெங்கும் ஷாஹின்பாக்குகள் உருவாகி வருகின்றன. பாசிசம் மக்களை ஒருங்கிணைத்திருக்கிறது; அவர்கள் பின்னால் அல்ல-அவர்களுக்கு எதிராக. இன்றைய குடியரசு தின செய்தி பாசிசத்தின் வீழ்ச்சி உறுதி என்பதுதான். அதை ஒரு நாள் “நாம் பார்ப்போமே, நாம் பார்ப்போமே” என மக்கள் பாடிக்கொண்டுள்ளனர். ஹம் தேக்கேங்கே, ஹம் தேக்கேங்கே!
கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

கருத்துகள் இல்லை: