திங்கள், 27 ஜனவரி, 2020

டிவி விவாதத்தில் பாஜக நாராயணனை ஒருமையில் விமர்சித்த அதிமுக ஜவஹர் அலி.. கூட்டணியில் சிக்கலா?

 amil.oneindia.com/authors/mathivanan-maran. பாஜக நாராயணனை ஒருமையில் விமர்சித்த அதிமுக ஜவஹர் அலி
சென்னை: பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணனை அதிமுகவின் ஜவஹர் அலி டிவி விவாதம் ஒன்றில் மிக கடுமையாக ஒருமையில் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியில் உண்மையிலேயே பிரச்சனை இருக்கிறது என்பதைத்தான் இது வெளிப்படுத்துவதாகவும் தெரிகிறது.
அதிமுக- பாஜக ஆகியவை கூட்டணி கட்சிகளாக இருப்பதாக பல நேரங்களில் வெளிப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் நடைமுறையில் இரு கட்சிகளிடையே விரிசல் அதிகமாக கொண்டிருப்பதாகவே அதன் தலைவர்களின் பேட்டிகள் வெளிப்படுத்துகின்றன.
கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது என குற்றம்சாட்டினார் பொன். ராதாகிருஷ்ணன்.

இதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் காட்டமான பதிலை கொடுத்தனர். இந்த பதிலுக்கும் பொன். ராதாகிருஷ்ணன் கடுமையான கருத்துகளை கூறியிருந்தார். இதனையடுத்து தமிழக அமைச்சர் பாஸ்கரன், பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல அதிமுக நேரம் பார்த்து கொண்டிருக்கிறது என கூறியிருந்தார். இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்த பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர், ஹலோ ராஜ்பவனா? என பாஸ்கரன் அமைச்சர் பதவியை பறிப்போம் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டார். தற்போது அதிமுக, பாஜக பிரமுகர்கள் டிவி விவாதம் ஒன்றில் மிக கடுமையாக மோதிக் கொண்ட நிகழ்வும் நடந்துள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்தை முன்வைத்து டிவி ஒன்றில் நேரலை விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் ஜவஹர் அலியும் பாஜகவின் நாராயணனும் பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் இவ்விவாதத்தின் போது பாஜகவின் நாராயணனை மிக கடுமையாக தடித்த வார்த்தைகளில் ஜவஹர் அலி விமர்சித்தார். இந்த விவாத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே காவிரி விவகாரத்தில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவோம் என பேட்டி கொடுத்ததால் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக பிரமுகர் நாராயணனை டிவி நேரலையில் ஒருமையில் தடித்த வார்த்தைகளால் விமர்சித்திருக்கும் ஜவஹர் அலி மீதும் அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதிமுக, பாஜக இடையேயே தொடரும் இந்த மோதல், இரு கட்சிகளின் கூட்டணியில் உண்மையிலேயே சிக்கல் இருக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்புகிறது.

கருத்துகள் இல்லை: