வெள்ளி, 31 ஜனவரி, 2020

முன் ஜாமீன் முயற்சியில் செந்தில்பாலாஜி ...

 கைது? முன் ஜாமீன் முயற்சியில் செந்தில்பாலாஜிமின்னம்பலம் : முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் வீடுகள், அலுவலகங்களில் இன்று (ஜனவரி 31) சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னை மத்திய குற்றப் பிரிவு டிஎஸ்பி தலைமையில் தனிப்படைகள் சென்னை, கரூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகம், அவரது தம்பியின் வீடு, சென்னை மந்தவெளியில் இருக்கும் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினார்கள். 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது செந்தில்பாலாஜி போக்குவரத்துக் கழக வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை போலீஸ் சோதனை நடப்பதாக காவல்துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

ஆனால் செந்தில்பாலாஜி இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இன்று பகல் அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், “ அந்த புகார் கொடுக்கும்போது என் பெயரோ, என் தம்பி பெயரோ இல்லை. வழக்குப் பதிவு செய்யும்போதும் என் பெயர் இல்லை. இந்த விவகாரத்தில் என் மீது எந்தத் தவறும் இல்லை என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது. இந்த நிலையில் புதிதாக ஒரு உத்தரவை பெற்றதாக சொல்லி என் வீடு, என் தம்பி வீடு, கிராமத்தில் இருக்கும் என் அப்பா அம்மா வீடுகளில் சோதனை என்ற பெயரில் போலீஸார் சென்றிருக்கின்றனர்.
இது முழுக்க முழுக்க வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்னை நிற்கவிடாமல் செய்வதற்காக எடப்பாடி அரசாங்கம் முயற்சி செய்கிறது. என்னை வழக்கு, நீதிமன்றம் என்று அலையவிட முயற்சிக்கிறார்கள்” என்றார் செந்தில்பாலாஜி.
இதற்கிடையில் இன்று நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் செந்தில்பாலாஜியை கைது செய்யும் முயற்சிகளும் மத்திய குற்றப் பிரிவு தரப்பில் நடப்பதாக தகவல்கள் கசிந்தன. இதை ஒட்டி முன்னெச்சரிக்கையாக செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயியிடம் செந்தில்பாலாஜிக்கு முன் ஜாமீன் கேட்டு முறையீடு செய்தனர். முறையாக மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறியுள்ளார். திங்கள் கிழமை செந்தில்பாலாஜியின் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: