வெள்ளி, 25 அக்டோபர், 2019

கூகுள் குவாண்டம் கம்ப்யூட்டர்.. அடுத்த பெரும் உலக சாதனை!


கேட் மெட்ஸ்  -   .hindutamil.in: இன்றுள்ள தொழில்நுட்பத்தில் பிற சூப்பர் கம்ப்யூட்டர்களால் கணக்கிட முடியாத வேகத்தில் கணக்கிடும் குவாண்டம் கம்ப்யூட்டரை உருவாக்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருப்பது அறிவியல் உலகைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 1980-களிலிருந்து பல்வேறு நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் இரவு பகலாக ஆராய்ந்துவரும் விஷயத்தில் கூகுள் எட்டியிருக்கும் சாதனை இது.
செயற்கை நுண்ணறிவு அல்லது ரோபாட்டுகள் தயாரிப்பில் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் மிகப் பெரிய அளவில் பயன்படவிருக்கிறது. இதன் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: பாரம்பரியமான கம்ப்யூட்டர்கள் 10,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும் முடிக்கத் திணறும் ஒரு கணக்கின் விடையை இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் 3 நிமிடங்கள் 20 விநாடிகளில் கண்டுபிடித்துவிடுமாம்.
பெரும் கண்டுபிடிப்பு
இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பின் சாதனை எப்படிப்பட்டது என்றால், அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் 1903-ல் விமானத்தைக் கண்டுபிடித்த சாதனைக்கு ஈடானது என்கிறார்கள். மனிதனால் விண்ணில் பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று அனேக ஆண்டுகள் நம்பிவந்தாலும் அதைச் சாதித்தவர்கள் ரைட் சகோதரர்கள்தான். ரைட் ஆரம்பத்தில் கண்டுபிடித்த விமானம் உண்மையில் பயனுள்ள ஆகாய விமானமாக இருந்திருக்கவில்லை. ஆனால், ஒரு உண்மையை நிரூபிக்க அது வடிவமைக்கப்பட்டது என்று அதுபற்றிக் குறிப்பிடுகிறார் விஞ்ஞானி ஸ்காட் ஆரன்சன். குவாண்டம் கம்ப்யூட்டர் குறித்து உலகுக்கு கூகுள் அறிவிப்பதற்கு முன்னால் அதன் திறனை ஆராய்ந்தவர் இவர்.

ஒரேயடியாக உற்சாகத்தில் பூமிக்கும் வானத்துக்கும் எகிறிக் குதிக்க வேண்டாம், இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் ஆய்வகத்திலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பதையும் நினைவில் வையுங்கள் என்று சில விமர்சகர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தனிப்பட்ட ஒரு குவாண்டம் கம்ப்யூட்டரைத் தயாரிக்க கோடிக்கணக்கான டாலர்கள் இப்போது தேவைப்படுகிறது. குவாண்டம் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முத்திரை பதித்துவிட வேண்டும், முதல் சாதனை நம்முடையதாக இருக்க வேண்டும் என்று மைக்ரோ சாஃப்ட், இன்டெல், ஐபிஎம், கூகுள் ஆகிய நிறுவனங்கள் தீவிரமாக முயன்றுவந்தன.
துணிந்து முதலீடுசெய்யும் முனைவோர் குவாண்டம் கம்ப்யூட்டரைத் தயாரிப்பதற்காக 45 கோடி டாலர்களை ஸ்டார்ட்-அப் என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். தேசிய குவாண்டம் ஆய்வகம் நிறுவ சீனா 45 கோடி டாலர்களை செலவிட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் அமெரிக்காவில் பேடன்ட் பதிவுரிமை பெற்ற நிறுவனங்களைப் போல இரண்டு மடங்கு நிறுவனங்களை சீனாவும் பதிவுசெய்திருக்கிறது.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், குவாண்டம் கம்ப்யூட்டரை நிறுவ தேசிய அளவில் எடுக்கும் முயற்சிக்கு 102 கோடி டாலர்களை ஆய்வுக்காக வழங்கியிருக்கிறது. இயற்பியலில் குவாண்டம் மெகானிக்ஸ் துறையில் நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் ஆய்வுகளின் விளைவுதான் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர்.
பாரம்பரியமான கம்ப்யூட்டர்கள் தங்களுக்குத் தரப்படும் துண்டு துண்டான தகவல்களை 1 அல்லது 0 என்று வைத்துக்கொண்டு செயல்படுகின்றன. இதுதான் பல ஆண்டுகளாக நடக்கிறது. ஒரு பொருள் மிகச் சிறியதாகவோ மிகவும் குளிர்ச்சியாகவோ இருக்கும்போது - ஒற்றைப் பொருளே இரு வேறு பொருளாகச் செயல்பட முடியும் என்று வைத்துக்கொண்டால், குவாண்டம் கம்ப்யூட்டர்களையும் புரிந்துகொண்டுவிடலாம். குவாண்டம் கம்ப்யூட்டர்களில் செயல்படுபவை கியூபிட் அல்லது குவாண்டம் பிட்டுகள். இரண்டு கியூபிட்டுகள் ஒரே சமயத்தில் நான்கு மதிப்புகளைக் கொண்டிருக்கும். கியூபிட்டுகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகும்போது அவை மிகவும் ஆற்றல் மிக்கவையாகிவிடுகிறது.
இருபதாண்டுகளுக்கு முன்னால் ஜப்பானியர்கள் சூப்பர் கண்டக்டிங் கியூபிட்டுகளை உருவாக்கி, இதில் முன்னோடியானார்கள். சில உலோகங்கள் மிக மிகக் குளிர்ச்சியான நிலைக்குக் குளிர்விக்கப்பட்டன. இதையடுத்து, ஐபிஎம், கூகுள், இன்டெல் நிறுவனங்களில் இதை அடியொற்றி ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கூகுள் நிறுவனம் குவாண்டம் கம்ப்யூட்டர் தொடர்பாக முதலில் தகவல்களை வெளியிட்டுவிட்டு, பிறகு அவற்றை ஆன்-லைனிலிருந்து செப்டம்பரில் நீக்கிவிட்டது.
இந்த மர்மமான நடவடிக்கையால் ஆய்வாளர்களும் போட்டி நிறுவனங்களும் தான் கண்டுபிடித்த எதையோ ஊதிப் பெரிதாக்கப் பார்க்கிறது கூகுள் என்று சந்தேகப்பட நேர்ந்தது. இப்போது கூகுளின் சாதனை உலகம் முழுவதும் பேசுபொருள் ஆகிவிட்டது. “குவாண்டம் மெகானிக்ஸ் துறையின் வழக்கத்துக்கு மாறான ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டு புதிய கம்ப்யூட்டர்களை உருவாக்கியிருக்கிறோம்” என்று கூகுளின் குவாண்டம் கம்ப்யூட்டர் தயாரிப்புக்குத் தேவைப்பட்ட வன்பொருளை (ஹார்ட்வேர்) உருவாக்கித் தந்த ஜான் மார்ட்டினிஸ் தெரிவிக்கிறார். அந்த ஆற்றலைப் பயன்படுத்தி கணக்கு போடும் நிலையில் இருக்கிறோம் என்றும் கூறுகிறார் மார்ட்டினிஸ்.
ஐபிஎம் சவால்
ஆயினும், வெவ்வேறு குரல்களும் கேட்காமல் இல்லை. “கூகுள் கூறிக்கொள்வதைப் போல அதன் குவாண்டம் கம்ப்யூட்டருடன் வழக்கமான கம்ப்யூட்டரால் போட்டியிட முடியாது என்றில்லை; குவாண்டம் கம்ப்யூட்டர் தீர்க்கும் மிக சிக்கலான கணக்கைத் தங்களுடைய கம்ப்யூட்டர்கள் போட்டு முடிக்க இரண்டரை நாட்கள் அல்லது அதைவிடக் குறைவான நேரம் போதும்; 10,000 ஆண்டுகள் பிடிக்கும் என்பதெல்லாம் மிகையானது” என்று சொல்லியிருக்கிறது ‘ஐபிஎம்’ நிறுவனம்.
“இதோடு, இப்போது புழக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர்களின் கதை முடிந்துவிட்டது; இனி குவாண்டம் கம்ப்யூட்டர்கள்தான் ஆதிக்கம் செலுத்தப்போகின்றன என்று யாரும் எண்ண வேண்டாம்” என்று ஐபிஎம் ஆய்வகத் தலைவர் டேரியோ கில் கூறுகிறார். அதேசமயம், “குவாண்டம் கம்ப்யூட்டர்கள் உண்மையிலேயே உருவாகிவிடும், 2020-ல் நாம் அதை அறிவியல், வணிகத் துறைகளில் பயன்படுத்துவோம்” என்றும் சொல்கிறார் அவர்.
கூகுள் நிறுவனம் மிகப் பெரிய சாதனையைச் செய்திருப்பதாகக் கூறுவதை வேறு சில ஆய்வாளர்களும் நிராகரிக்கின்றனர். கூகுள் கூறும் கணக்கு அதில் தொடர்புள்ள எண்கள் எல்லாவிதக் கணக்குகளுக்கும் அவசியப்படாது என்கின்றனர். ஆனால், எல்லாவற்றைத் தாண்டியும் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. கூகுளின் குவாண்டம் கம்ப்யூட்டர் தயாரிப்பு முயற்சியானது, முதலில் கல்விக்கூடங்களில் தோன்றியதே.
சான்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வில் ஈடுபட்ட இயற்பியலாளர்களை கூகுள் நிறுவனம் பெரும் செலவு செய்து தனக்காகப் பணியில் அமர்த்திக்கொண்டது. “கூகுளின் கண்டுபிடிப்பு அதற்கு மட்டுமான சாதனையல்ல, அறிவியல் சமூகத்துக்கே பெரிய சாதனை” என்று கூறுகிறார் சாட் ரிகெட்டி. இவர் ஐபிஎம் நிறுவனத்தின் குவாண்டம் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவில் பணியாற்றியவர். இப்போது சொந்தமாக நிறுவனம் நடத்துகிறார். எப்படியும் குவாண்டம் கம்ப்யூட்டர்களின் வருகை நிகழ்ந்துவிட்டது!
‘தி நியூயார்க் டைம்ஸ்’,
தமிழில்: சாரி

கருத்துகள் இல்லை: