சனி, 26 அக்டோபர், 2019

இஸ்லாமியமத வெறியர்களும் இந்து மதவெறியர்களும் ஒரே பாதையில் செல்லும் .. சமூகவிரோதிகள்

Don Ashok :  மத அடிப்படைவாதம் என்பது இருபுறம் கூரான கத்தி. இந்துத்துவாவும்,
இஸ்லாமிய அடிப்படைவாதமும் எதிர் எதிர் துருவங்கள் போலத் தெரியும். ஆனால் உண்மையில் ஒன்றை ஒன்று உரம்போட்டு வளர்க்கும். ஒன்றில்லையேல் மற்றொன்றில்லை.
ஒருபக்கம் இந்தியா முழுக்க விஷம்போல் பரவி இருக்கும் இந்துத்துவாவை நாம் கண்டித்தும் எதிர்த்துக் கொண்டிருக்கும்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்வதை அமைதியாகக் கடக்க முடியாது, கூடாது. தவ்ஹீத் ஜமாத்தில் ஏற்கனவே காதலர் தினம் என்றால் "கற்பு கொள்ளையர் தினம்" என பைத்தியக்காரர்கள் போல போஸ்டர் அடிப்பார்கள். அதுவாவது பரவாயில்லை, பொதுப்பண்டிகை. ஆனால்
இப்போது ஒருபடி மேலே போய் பட்டாசு வாங்காதீர்கள் என தீபாவளிக்கு போஸ்டர் அடித்திருக்கிறார்கள். இந்த வேண்டாத வேலை இவர்களுக்கு எதுக்கு? இந்துத்துவா என்றால் என்னவென்ற அறியாத ஒருவனை இது எரிச்சலைடய வைக்குமா வைக்காதா? இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயலால், "ஆமா. பாஜககாரனுங்க சொல்றது சரிதான். இவனுங்க இப்படிதான்," என்ற எண்ணம் ஏற்பட்ட அந்த இளைஞன் இந்து அடிப்படைவாதியாக மாறுவான்.


காஷ்மீரில் பக்ரீத்தைக் கொண்டாட விடாமல் பாஜக அரசு தனக்கே உரிய சைக்கோத்தனத்தைக் காட்டியபோது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் எரிச்சலடைந்தார்கள், வருந்தினார்கள். இந்தச் சூழலை, இந்த நல்லிணக்கத்தை, பிறரின் உரிமைகளில் தலையிடாமல் இருப்பது மட்டுமின்றி அதற்காக குரலும் கொடுக்கும் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான வேலையில் RSS மட்டுமல்ல, தவ்ஹீத் ஜமாத் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத கும்பல்களும் ஈடுபட்டுள்ளன. இது பெரும் ஆபத்து.
தவ்ஹீத் ஜமாத் இப்படியான கிறுக்குத்தனங்களைச் செய்யும்போது அதிக அளவிலாமஅளவிலான இஸ்லாமிய சகோதர்கள் அதை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். அவர்களை முழுமையாக புறக்கணிக்கவும் வேண்டும். மத நல்லிணக்கத்தைக் கெடுக்க நேரடியாக வேலை செய்தாலும், மறைமுகமாக வேலை செய்தாலும் அவர்கள் மனிதகுல எதிரிகள்தான். தமிழ்நாட்டின் எதிரிகள்தான்.
-டான் அசோக்
அக்டோபர் 26, 2019

கருத்துகள் இல்லை: