வெள்ளி, 25 அக்டோபர், 2019

விக்கிரவாண்டி நாங்குநேரி.. திமுகவின் சறுக்கல்? வாரிசு அரசியல் மட்டுமல்ல, அதையும் தாண்டி முக்கிய நிர்வாகிகள்...?

ஜீவா வனத்தையன் தமிழரிமா : திமுக வின் கேடு வாரிசு அரசியல்
மட்டுமல்ல, அதையும் தாண்டி முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கு கட்சியில் மாற்று உருவாகி விடாமல் பார்த்துக்கொள்வதுதான்.
கட்சியின் நீண்டகால உறுப்பினர்களை வளர விடாமல் தங்களுக்கு அடுத்ததாக கட்சியில் தங்கள் வாரிசுகளையே முன்நிறுத்துவதும், அதற்காக திறமைசாலிகளை கட்சியில் புறக்கணிப்பதும் தான் மிகப்பெரிய சுயநலமாக மாறி விடுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே திமுகவின் மீது வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு திமுகவின் உறுப்பினர்களாலேயே வைக்கப் படுவதுதான் வேதனை...!!
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல வன்மத்தோடு நாம் திமுக மீது குற்றச்சாட்டு கூறவில்லை. வருத்ததோடுதான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களின் ஆதிக்கத்தால் எத்தனை திறமைசாலிகளை திமுக இழந்திருக்கிறது சற்றே சுய பரிசோதனை செய்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம். நாங்கள் எந்த சுய பரிசோதனைக்கும் தயாரில்லை என்று திமுக நிர்வாகிகள் சொல்வார்களேயானால் அதற்காக நாம் போராடவெல்லாம் முடியாது.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை இந்திய அரசியல் மட்டுமல்ல, உலக அரசியலே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் திமுக மட்டும் தங்களை நிர்வாகக்குழுவை மாற்றி அமைக்காமல் இருப்பது கட்சிக்குள் இளரத்தம் பாய்வதை தடுப்பது போலுள்ளது. அப்படியே நிர்வாகிகள் மாற்றம் ஏற்பட்டாலும் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் நிர்வாகிகளின் வாரிசுகளே கட்சிக்குள் கோலோச்சுவது புதிய உறுப்பினர்களை கவர வாய்ப்பற்று போகிறது.

திமுக ஒரு சமூக நீதி சித்தாந்த நெறியுள்ளக் கட்சி. சமூக நீதி என்பது அரசு சலுகைகளில் மட்டும் இல்லாமல் கட்சிக்குள் அதிகாரப் பரவலுக்கும் அளவீடாக இருக்க வேண்டுமல்லவா..? சமூக நீதி என்பதை ஏதோ ஒரு ஊறுகாய் போல தொட்டுக்கொள்வது கட்சியின் கொள்கைக்கு உகந்ததல்ல..! ஒரு சமூகத்தில் எல்லோருக்கும் சம நீதி வழங்குவதற்கு நீண்ட நெடிய ஆட்சித் தேவையில்லை. ஒரு நாள் ஆட்சி அதிகாரம் போதும். முதலில் கட்சிக்குள் சமூக நீதியை நிலைநாட்டிவிட்டு அரசில் மறுமலர்ச்சி பற்றி பேசுவது நல்லது.
பெரியார் அப்படித்தான் செய்தார். முதலில் தன் கொள்கைக்கு அவர் உண்மையாக இருந்தார். அப்புறம் தான் அதை சமூக தளத்தில் முன்வைத்தார். தன் குடும்பத்தில் கடவுள் நம்பிக்கையாளர்களை வைத்துக் கொண்டு விடுமுறை நாள் கொண்டாடுவதை யாரும் ரசிக்க மாட்டார்கள் என்பதை திமுக எப்போது உணரப்போகிறது. திமுக வை இந்துக்களுக்கு எதிரான கட்சியாக முன்னிறுத்த பாஜக பகீரத முயற்சியை செய்கிறது. அந்த முயற்சியை முறியடிக்கதான் தலைவர்கள் தங்களை இந்துக்களாக அடையாளம் காட்டிக்கொள்ள துடிக்கிறார்களோ என்ற சிந்தனை மேலோங்குகிறது.
இந்துத்துவாவை எதிர்ப்பது திமுகவின் கொள்கை என்றால் அதில் எந்த சூழலிலும் சமரசம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். பல விவகாரங்களில் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக எங்களை அணுகுகிறார்கள் என்று பாஜகவினர் ஊடகங்களில் பேசுவதற்கு திமுக தரப்பு மறுப்பு வெளியிடுவதேயில்லை. இந்த மௌனம் திமுகவை ஆதரிக்கும் சிறுபான்மையினர் மத்தியில் அவ்வப்போது சலசலப்பதை நாம் புறம் தள்ளி விட முடியாது.
கலைஞருக்குப் பிறகு திமுகவின் தினசரி அரசியல் செயல்பாடுகள் செயலிழந்து போனதும், அரசின் மீதான விமர்சனம் அவ்வப்போது மியூட் மோடுக்கு மாறுவதும் மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு ஆளுக்கட்சிகளிடம் திமுக சமரசம் செய்து கொண்டு போகிறதோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது. இதையெல்லாம் திமுக தலைமை கவனிக்காமல் விட்டால் திமுகவின் எதிர்காலத்தை காவிகள் களவாடி விடும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது...!

கருத்துகள் இல்லை: