ஞாயிறு, 20 அக்டோபர், 2019

நாங்குநேரியில் ஓட்டுக்கு இரண்டாயிரம் (அதிமுக) இப்போ வீட்டுக்கு எட்டாயிரம்?

மின்னம்பலம் :வீட்டுக்கு எட்டாயிரம்: நாங்குநேரி புது ஃபார்முலா"!நாளை
சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்கும் நாங்குநேரி தொகுதி ஒரு வகையில் முன்னுதாரணம் படைக்க இருக்கிறது. அது எந்த வகையில் என்பதற்கு நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கீழநத்தம் நகரப் பகுதியில் இருக்கும் ஒரு டீக்கடையில் நேற்று முன் தினமும் நேற்றும் நாம் கண்டு, கேட்டு விசாரித்த சம்பவங்களே சாட்சி. நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கீழநத்தம் பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த டீக்கடை.
சுமார் ஒன்றரைமணி நேரம் அந்த டீக்கடையில் ஒரு முக்கிய நண்பருக்காக நாம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த முக்கிய நண்பரை சந்திப்பதற்குள், அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரையும் அந்த டீக்கடையில் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் அந்த டீக்கடைக்கு வந்து சென்றுகொண்டிருந்தனர். நாம் அமர்ந்து செய்தித் தாளுக்குள் கண்ணைக் கொடுத்து, அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடலுக்குள் காது கொடுத்தோம்.

டீக்குடித்துக் கொண்டிருந்த நபர் டீ மாஸ்டரைப் பார்த்து, ‘என்ன வந்துடுச்சா?’ என்று கேட்டார். அவரோ, ‘முந்தாநேத்தே வந்துடுச்சு... உமக்கு?’ என்று திருப்பிக் கேட்டார். வந்துட்டுது... வந்துட்டுது என்று அந்த நடுத்தர வயது நபர் பதிலளித்தார்.
எது வந்துச்சு? என்று கேட்டார் மாஸ்டர். அதற்கு அந்த நபர், லோக்கல் அரசியல்வாதி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘ அவர்தான் வந்தாரு’ என்றார் நாசூக்காய். அதாவது காங்கிரஸ் பணமா, அதிமுக பணமா என்று கேட்டதற்கு அவர்களுக்கு மட்டுமே அறிந்த லோக்கல் அரசியல் புள்ளியின் பெயரைச் சொல்லி ரகசியம் பாதுகாக்கிறாராம் அவர்.அப்போது அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர், ‘முடியாமக் கெடந்தாளே.. என் பாட்டி போய் சேர்ந்துட்டாளப்பா... நாலு நாளாச்சு’ என்று போனில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட பக்கத்தில் இருந்த நபர், ‘என்னமோ ஒவ்வொரு ஓட்டுக்கும் காசு கொடுக்குற மாதிரியும் அதனால பாட்டிக்கு விட்டுப் போன மாதிரியும் வருத்தப்படறான் பாரு. இப்ப யாரு ஓட்டுக்கு காசு கொடுக்குறா? வீட்டுக்கு இவ்வளவுனுதான கொடுக்குறான்’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு அங்கேயே விசாரிக்க ஆரம்பித்தோம்.
“நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்காக 70 சதவிகிதம் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்கச் சொல்லி திமுகவிடம் தொகையை ஒப்படைத்துவிட்டது காங்கிரஸ். நாங்கள் கொடுத்த தொகை முழுதும் மக்களிடம் போய் சேர்ந்ததா என்று காங்கிரஸால் வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை. ஆனால் உள்ளுக்குள் நிறைய புகார்கள் திமுகவினர் மீது காங்கிரஸாருக்கு இருக்கின்றன.
திமுக சார்பில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அதிமுக சார்பில் ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படியே கொடுத்து வந்த நிலையில் சில ஊர்களில் சில வீடுகளில் ஒருவர் அல்லது இருவர் மற்றவர்கள் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். அப்போதுதான், ‘ தீபாவளி வருது ஓட்டுக்கு இவ்வளவுனு கொடுக்கறதுக்கு பதிலா வீட்டுக்கு இவ்வளவுனு கொடுத்தா என்ன?’ என்ற யோசனை அதிமுகவினருக்குத் தோன்றியிருக்கிறது. இதையடுத்து இரண்டு ஓட்டு இருந்தாலும் சரி, நான்கு ஓட்டு இருந்தாலும் சரி மொத்தமாக வீட்டுக்கு எட்டாயிரம் ரூபாய் என்ற முடிவுக்கு வந்து அதன்படியே கொடுத்து முடித்திருக்கிறார்கள்.
திமுக -காங்கிரஸ் கூட்டணி ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், அதிமுகவினரோ எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி ஓட்டுக்கு எட்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்” என்று தகவல்களைத் தெரிவித்தார்கள் கீழ் நத்தம் பகுதிக்காரர்களே.
இடைத்தேர்தல்களின் போது மாஸ் ஆக பெரும்பாலான வாக்காளர்களுக்கு பொறிமுறை வகுத்து பணம் கொடுப்பது திருமங்கலம் இடைத்தேர்தலில் பெரிய அளவில் நடந்தது. இதனால் திருமங்கலம் ஃபார்முலா என்று பெயரே வந்தது. இப்போது ஓட்டுக்கு இத்தனை ரூபாய் என்பதை விட்டு, தீபாவளியை ஒட்டு வீட்டுக்கு எட்டாயிரம் ரூபாய் என்ற புதிய ஃபார்முலாவை படைத்திருக்கிறது நாங்குநேரி அதிமுக.

கருத்துகள் இல்லை: