வியாழன், 22 பிப்ரவரி, 2018

கும்பகோணம் கோவில் தீவிபத்து ,, கோவில்கள் தொடர் தீவிபத்துக்கள் .. மதக்கலவரத்துக்கு ?

முடிவில்லா கோயில் தீ விபத்துகள்!மின்னம்பலம் : கும்பகோனத்தில் உள்ள 1000 ஆண்டு பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று மதியம் (பிப்ரவரி 22) தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் சாலையில் திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை கோயிலில் சாமிக்கு நித்திய பூஜைகளை நடத்தப்பட்டது. மதியம் கருவறையில் சுந்தரேசன் குருக்கள் பூஜைகளை முடித்து விட்டுத் திரும்பியுள்ளார். அப்போது, அருகில் எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கு சரிந்து, சாமி சிலையில் உடுத்தப்பட்டிருந்த ஆடையில் பற்றி எரியத் தொடங்கியது.
அதிர்ச்சியடைந்த குருக்கள் தண்ணீர் கொண்டு வர வெளியே ஓடியுள்ளார். அதற்குள் கருவறையில் திறந்து வைக்கப்பட்டிருந்த பீரோவில் தீ பரவியது. அதில் இருந்த பட்டுப்புடவைகள் எரிந்து நாசமாகியது.
அதைத் தொடர்ந்து, கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடம் அவர் விபத்து குறித்து கூறியுள்ளார். உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அம்மனுக்கு சாத்தப்படும் விலையுயர்ந்த பட்டுப்புடவைகள், வேஷ்டிகள், நகைகள் மற்றும் திருவாட்சி, பித்தளை பொருட்களான கற்பூர தாம்பாளங்கள், நெல் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
பிப்ரவரி 2ஆம் தேதி இரவு, மீனாட்சி அம்மன் கோயில், ஆயிரம் கால் மண்டபத்தின் அருகில் தீவிபத்து ஏற்பட்டு, 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.பிப்ரவரி 6ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்ட மண்டபத்திற்கு அருகே உள்ள பசுபதி ஈஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்து விழுந்தது. பிப்ரவரி 7ஆம் தேதி திருவாலங்காட்டில் உள்ள புகழ்பெற்ற வடாராண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் பற்றி எரிந்து சாம்பலானது. வேலூர் பொன்னியம்மன் கோயிலில் இருந்த 2 தேர்கள் பிப்ரவரி 8ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு சாம்பலானது. பிப்ரவரி 8ஆம் தேதி மின்கசிவு ஏற்பட்டதால், மீண்டும் மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது கடந்த 13ஆம் தேதி இரவு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில், நடன கலைஞர்களுக்காக சமைத்து கொண்டிருந்த போது, கேஸ் சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. அதேபோல், திருவாரூர் தியாகராஜர் சாமி சன்னதியில் மூலஸ்தான பிரகாரத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி சன்னதியில் அம்மனுக்கு சாத்தப்பட்டு இருந்த வஸ்திரத்தில் அகல் விளக்கு சாய்ந்து தீ பிடித்து எரிந்தது.
இந்த மாதம் முழுவதும் கோயில்களில் தொடர்ச்சியாகத் தீ விபத்து ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: