வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

இந்தியாவில் 4ஜி வேகம் குறைவு ..பாகிஸ்தான், இலங்கை, கஜகஸ்தானை விட : ஆய்வில் தகவல்

tamilthehindu : பிரதமர் மோடியும், மத்திய அரசும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வேகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும். இந்தியாவில் 4ஜி வசதி கூட சரிவர கிடைப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், கஜகஸ்தான், இலங்கையை விட இந்தியாவில் 4ஜி வேகம் மிக குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
‘தி ஸ்டேட் ஆப் எல்டிஇ’ என்ற மொபைல் போன் ஆய்வு நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 88 நாடுகளில் வெளியிடங்களில் கிடைக்கும் 4ஜி அலைவரிசையின் வேகத்தை அளவிடப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான், கஜகஸ்தான், சவுதி அரேபியா, இலங்கை, அல்ஜீரியா போன்ற நாடுகளை விடவும், இந்தியாவில் 4ஜி வேகம் மிக குறைவாக உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘இந்தியாவில் விலை குறைந்த ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் கட்டண குறைப்பு போன்ற காரணங்களால் 4ஜி சேவை பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளையும், விலை குறைப்பையும் வாரி வழங்கி வருகின்றன.
இதனால் பெருமளவு வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றன. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு மொபைல் இண்டர்நெட் சேவையில் பெரிய புரட்சியே நடந்துள்ளது. அதிகமான வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் ஈர்த்துள்ளதால், அதனுடன் போட்டியிட வேண்டிய கட்டாயம் மற்ற நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் 4ஜி சேவை வேகம் சிங்கப்பூரில் அதிகமாக உள்ளது. அங்கு 44.31 எம்பிபிஎஸ் வேககத்தில் 4ஜி வேகம் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நெதர்லாந்தில் 42.12 எம்பிபிஎஸ் வேகமும், நார்வேயில் 41.20 எம்பிபிஎஸ் வேகமும், தென் கொரியாவில் 40.20 எம்பிபிஎஸ் வேகத்திலும் ஹங்கேரியில் 39.18 எம்பிபிஎஸ் வேகத்திலும் 4ஜி சேவை கிடைக்கிறது.
அமெரிக்காவில் 16.31 எம்பிபிஎஸ் வேகத்தில் மட்டுமே 4ஜி சேவை கிடைக்கிறது. பாகிஸ்தானில் 13.56 எம்பிபிஎஸ் வேகமும், இலங்கையில் 13.95 எம்பிபிஎஸ் வேகமும் உள்ளது. ஆனால் இந்தியாவில் 4ஜி சேவை சராசரியாக வெறும் 6.07 எம்பிபிஎஸ் வேகத்தில் மட்டுமே 4ஜி சேவை கிடைக்கிறது. இலங்கை, கஜகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலும், இந்தியாவை விட 4ஜி வேகம் அதிகமாக கிடைக்கிறது.
4ஜி இணைப்பு கிடைப்பதில், 97.49 சதவீதத்துடன் தென் கொரியா முதலிடத்திலும், 94.70 சதவீதத்துடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 92.16 சதவீதத்துடன் நார்வே மூன்றாவது இடத்திலும் உள்ளன. 90.34 ஹாங்காங் நான்காவது இடத்திலும், 90.32 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
4ஜி இணைப்பு வேகம் கிடைப்பது இந்தியாவில் ஒரளவு சீராக இருக்கிறது. இந்தியாவில் 86.26 சதவீத அளவிற்கு 4ஜி இணைப்பு கிடைக்கிறது. 88 நாடுகளின் பட்டியலில் இது, 14வது இடமாகும்.அதுபோலவே இந்தியா முழுவதுமே 4ஜி இணைப்பு கிடைப்பதில் பெரிய அளவில் சிக்கல்கள் இல்லை.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: