திங்கள், 19 பிப்ரவரி, 2018

BBC : தஷ்வந்த்திற்கு தூக்கு... சிறுமி ஹாசினி கொலை வழக்கு


சென்னையைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 23 வயது தஷ்வந்த்திற்கு தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.e>தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைந்து, 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலையிலிருந்தே நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. காலை 11 மணியளவில் தீர்ப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. தீர்ப்பு வெளியாவதற்கு சிறிது நேரம் முன்பாக நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டன. அதற்குப் பிறகு, பிற்பகல் மூன்று மணியளவில் தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதி வேல்முருகன் கூறினார். இதையடுத்து நீதிபதியிடம் பேசிய தஷ்வந்த் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமெனக் கோரினார்.

இந்த நிலையில், மாலையில் தஷ்வந்த்திற்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இது தவிர, 363 பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பிரிவு 366ன் கீழ் 10 ஆண்டுகளும் 354-பி பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பிரிவு 201ன் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான போஸ்கோ சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் 10 ஆண்டுகளும் 8வது பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனை தஷ்வந்த்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.< re>இந்த வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லாத நிலையில், அறிவியல்பூர்வமாக ஆதாரங்களைச் சமர்ப்பித்து வழக்கை நடத்தியதாக சிறுமியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார். அறிவியல்பூர்வமாக ஆதாரங்களைத் திரட்ட வேண்டியிருந்ததாலேயே காலதாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

கதறி அழுத ஹாசினியின் தந்தை

இந்தத் தீர்ப்பைக் கேட்ட ஹாசினியின் தந்தை, தனது மொபைல் போனில் ஹாசினியின் புகைப்படத்தைப் பார்த்து கதறி அழுதார். "இந்தத் தீர்ப்பு எனக்கு திருப்தி அளிக்கிறது. முதலில் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டாமென பலரும் கூறியதாகவும் ஆனால், தற்போது நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கியிருக்கிறது. "
"அவன் மனிதனே அல்ல. அவன் அரக்கன். அவன் என் குழந்தையுடன் விளையாடுவான். அப்படிச் சென்ற குழந்தையை அவன் கொன்றுவிட்டான். தாயையும் கொன்றுவிட்டான். அவன் ஒரு அரக்கன். இது நல்ல தண்டனை. அவன் உயிரோடு இருக்கக்கூடாது" என்று செய்தியாளர்களிடம் கூறினார் பாபு.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி, சென்னையை அடுத்த போரூருக்கு அருகில் உள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி காணாமல் போனாள். சென்னை மாங்காடு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினரும் குழந்தையைத் தேடிவந்தனர்.
அப்போது குழந்தையின் வீட்டின் அருகில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரைக் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது குழந்தையைத் தான் தன் வீட்டிற்கு அழைத்துவந்து, பலாத்காரம் செய்து கொலைசெய்ததை தஷ்வந்த் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.



இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று தஷ்வந்த்தின் தாய் சரளா அவரது வீட்டில் அடித்துக்கொல்லப்பட்டார். செலவுக்குப் பணம் கேட்டு தராத காரணத்தால், தன் தாயை அடித்துக்கொன்ற தஷ்வந்த், அவரது நகைகளுடன் மும்பைக்குச் சென்றார். இதன் பிறகு, காவல்துறையின் தேடுதலில் டிசம்பர் ஆறாம் தேதியன்று தஷ்வந்த் கைதுசெய்யப்பட்டார்.  

இதன் பிறகு, செங்கல்பட்டு பெண்கள் நீதிமன்றத்தில் ஹாசினி கொலைவழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்துவந்தது.
இந்த வழக்கில் சட்டப்பிரிவுகள் 363 (கடத்தல்), 366 (தூக்கிச்செல்லுதல்), 354 B (ஆடையைக் களையும் நோக்கத்துடன் பெண்களைப் பலாத்காரம் செய்தல்), 302 (கொலை), 201 (தடயங்களை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்தது. 


இது தவிர, போஸ்கோ சட்டத்தின் 6, 7,8 பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
ஹாசினி வழக்கு தவிர, மும்பையில் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடிய வழக்கு, தாய் சரளாவைக் கொலைசெய்த வழக்கு ஆகியவை நிலுவையில் இருக்கின்றன. சரளாவைக் கொன்ற வழக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

கருத்துகள் இல்லை: