

1995ம் ஆண்டு ஜனவரியில், ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம், கணித உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வை நடத்தியது. அதேபோல 1996 ஜூன் மாதம், கணித பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஆனால் தகுதி இருந்தும் இவ்விரு தேர்வுகளின்போதும் முனைவர் வசந்தா கந்தசாமிக்கு பணி கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் தகுதி குறைவான முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எஸ்.ஜி.காமத் மற்றும் ஏ.ரங்கன் ஆகியோருக்கு உதவி பேராசிரியர் பணி வழங்கப்பட்டது.
இதையடுத்து 1997ம் ஆண்டு, ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார் வசந்தா கந்தசாமி. 2013ம் ஆண்டு ஜூலை 25ல் ஹைகோர்ட்டின் ஒரு நீதிபதி அடங்கிய பெஞ்ச் வசந்தாவின் குற்றச்சாட்டில் உண்மைக்கான முகாந்திரம் இருப்பதாக அறிவித்து, 1995-2000 வரையிலான ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவன பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
ஹைகோர்ட் அதிரடி இதையடுத்து டிவிசன் பெஞ்ச் மூலமாக இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை பெற்றது ஐஐடி மெட்ராஸ். இருப்பினும் வசந்தா கந்தசாமி தமது சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு இப்போது தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், 2 மாதங்களுக்குள் முனைவர் வசந்தா கந்தசாமியின் கோரிக்கையை பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஐஐடி மெட்ராஸ் தேர்வு முறையை ஹைகோர்ட் விளாசியுள்ளது. ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் பிற கல்வி நிறுவனங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களை தேர்வு செய்த நடைமுறை பாரபட்சமாக உள்ளது. இதற்காக ஆதாயம் பெற்றுக்கொண்டதற்கான முகாந்திரம் இல்லை என்றபோதிலும், தேர்ச்சி நடைமுறை பாரபட்சமாக உள்ளது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை கூட வளைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
தகுதி ஐஐடி மெட்ராஸ் முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத்தான் முன்னுரிமை தருகிறது என்பது நீண்டகால குற்றச்சாட்டு. முனைவர் வசந்தா கந்தசாமிக்கு நீதி கோரி ஐஐடி முன்பாக ஏராளமான போராட்டங்கள் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டும் உள்ளன.
முனைவர் வசந்தா கந்தசாமி இதுவரை 116 புத்தகங்களை எழுதியுள்ளார், 800க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார் (http://www.vasantha.in). அவரது ஏராளமான கணித நூல்களை அமெரிக்கா நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக