வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

அத்தனை தொலைக்காட்சிகளிலும் ஜாக்கி வாசுதேவ் தமன்னா விளம்பர சிவ .... ராத்திரி!

சிவசங்கர் எஸ்.எஸ் : முக்கிய எதிர்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க, மு.லீக், ம.ம.கட்சி ஆகியவற்றின் பேச்சாளர்கள் கொண்ட கூட்டம். அ.தி.மு.க அரசின் அராஜகப் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பொதுக் கூட்டம், 13.02.2018 அன்று.
அரியலூரில், தி.மு.க சார்பில் நெல்லிக்குப்பம் புகழேந்தி அவர்களும், காங்கிரஸ் சார்பில் திருச்சி வேலுசாமி அவர்களும் உரையாற்றினர். கூட்டம் 10 மணியை கடந்து முடிந்தது.
அலுவலகம் திரும்பி, சென்னை பயணத்திற்கு தயாரானேன். மறுநாள் கழக செயல் தலைவர் தளபதி அவர்களின் கள ஆய்வு. ஊராட்சி செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுடன் மேற் கொள்ளும் ஆய்வு நிகழ்ச்சி.
இரவு உணவுக்கு அமர்ந்தேன். தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. கலைஞர் செய்திகளில், திருவள்ளூர் பொதுக் கூட்டத்தில் தளபதி அவர்கள் ஆற்றிய கண்டன உரையின் முக்கியப் பகுதிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
தளபதி உரை முடிந்ததும், மற்ற சேனல்களுக்கு தாவினேன். தலைப்பு செய்திகள், விரைவுச் செய்திகள் என்று பல்வேறு தலைப்புகளில் செய்தி மழை. சில சேனல்கள் காட்சி மாற ஆரம்பித்தன.

சிவராத்திரியாம். நேரலைக் காட்சிகள் வர ஆரம்பித்தன. கலைஞர் செய்திகளிலும், ஜெயா பிளஸ்ஸிலும் மாத்திரம் அரசியல் செய்திகள். கிட்டத்தட்ட மீதி அத்தனை செய்தி சேனல்களிலும் சிவராத்திரி செய்திகள்.
திருவண்ணாமலையில், சிவராத்திரிக்காக லிங்கத்திற்கு பால் அபிஷேகம். லைவ் ஆக ஓட ஆரம்பித்தது. இப்போது டி.வி திரை இரண்டானது. ஒரு பாதியில் திருவண்ணாமலை, இன்னொரு பாதியில் ஜக்கி தோன்றினார். ஆமாம், ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ்.
கொஞ்ச நேரத்தில், முழு திரையும் ஜக்கி வசம் சென்றது.
இன்னொரு தொலைக்காட்சியில், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவராத்திரிக்காக நடைபெற்ற நடன நிகழ்ச்சி காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இங்கும் ஜக்கி நுழைந்து திரையை கைப்பற்றினார்.
ஒவ்வொரு சேனலும் இப்படியே ஜக்கி வாசுதேவ் வசம் சென்றிருந்தது. இப்போது ஆல் சேனல்ஸும் கோவை ஈஷா யோகா மையத்தை ஜூம் இன், ஜூம் அவுட் செய்துக் கொண்டிருந்தன.
பிரபல டைரக்டர் கௌதம் வாசுதேவ் திரைப்படங்கள் மிக ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அரதப் பழசான கதையையும் பளபள என மின்ன விடுவார். வழக்கமான காதல் அல்லது ஆக்‌ஷன் கதைகள் தான் அவரது படங்களின் மையக் கருவாக இருக்கும்.
அதே போல் தான் ஜக்கி வாசுதேவ்வும். கரடுமுரடான காட்டை, வயலை பெரிய திடலாக்கி விழா நடத்தினார். பழைய சிவனுக்கு, மெகா சிலை. பழைய கோவில்களில் கசகசக்க நடக்கும் சிவராத்திரியை, மெகா பட்ஜெட்டில் நடத்தி மிரள வைத்தார். இசை, நடனம் மூலம் நரம்பை சுண்ட விடுவது தான் ஜக்கியின் மையக் கரு.
கடந்த ஆண்டு மோடியை அழைத்து வந்து படத்தை புரமோட் செய்தார். அப்போது தான் 'மெகா' ஆதிசிவன் சிலையை ரிலீஸ் செய்தார். அப்போது தலைவன் ஜக்கியும், பிரதமர் மோடியும் கொடுத்த டான்ஸ் மூவ்மெண்ட்கள் பிரசித்தி பெற்றவை.
யானை கடக்கும் பாதையை (elephant corridor) ஆக்கிரமித்தும், காட்டுப் பகுதியை அழித்தும் அமைக்கப்பட்டது ஆதிசிவன் சிலை வளாகம். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள், மத்திய சுற்றுச்சூழல் துறையினர். அந்தத் துறைக்கும் தலைமை அமைச்சர் தான் பிரதமர் மோடி. நடவடிக்கை எடுக்க வேண்டுயவர் நடனமாடி மகிழ்ந்தார்.
இந்த ஆண்டு புரமோஷனுக்கு செம டீம். தர்மயுத்தத் தலைவன் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அம்மா சமாதி முன் அமர்ந்திருந்தது போன்றே, தியான 'மோட்'டில் இருந்தார். எம்.ஜி.ஆர் போல் திட்டு திட்டான தாடியுடன் அமைச்சர் வேலுமணி. விஞ்ஞானி செல்லூர் ராஜு. அப்புறம், திரைப்பட நடிகை தமன்னா. அவருடன் ஜக்கி எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் வைரல்.
'ஓம் நமச்சிவாய' என முனக ஆரம்பித்து, நேரம் நள்ளிரவு 12.00 நெருங்க, நெருங்க ஜக்கியின் வாய்ஸ் ஹைபிட்ச்சை நோக்கி பயணித்தது. பின்னால் அதற்கு ஏற்ப இசை முழங்கியது. அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு நரம்பு முறுக்கேறிக் கொண்டிருந்தது.
எல்லோரும் கண்ணை மூடி லயித்திருக்க, ஜக்கி மாத்திரம் விழித்திருந்து முனகிக் கொண்டிருந்தார்.
பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து நடந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட களைப்பு, என்னை ஆட்ட ஆரம்பித்தது. தூங்க ஆயத்தமானேன்.
ஜக்கி தூங்காமல், ஆடிக் கொண்டிருந்தார், ஆட்டுவித்துக் கொண்டிருந்தார். மணி 12.00 ஆகியது. டி.வி ஸ்க்ரோலிங்கில் செய்தி, 'இன்று காதலர் தினம். வேலண்டைன்ஸ் டே'. ஜக்கி முனகிக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
தொலைக்காட்சியை நிறுத்தினேன்.
# மகாசிவராத்திரி - ஜக்கி கொண்டாட்டம் - காதலர் தினம் !

கருத்துகள் இல்லை: