சனி, 18 ஏப்ரல், 2015

ஆந்திராவில் தமிழர்களின் கண்களை தோண்டியெடுத்து சித்ரவதை: உறவினர்கள் திடுக் தகவல்

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் நடைபெற்ற விசாரணையில் கொல்லப்பட்டவரகளின் உறவினர்கள் திடுக்கிடும் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தேசிய மலைவாழ் மக்கள் நல வாரிய துணை கமிஷனர் ரவிதாக்கூர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். தமிழக டி.ஜி.பி. அசோக்குமார் அகர்வாலும் உடன் இருந்தார்.சேலம் ஆத்தூர் மலையோர கிராமமான தான்யாவை சேர்ந்தவர்கள் சசிகுமார், மற்றும் சின்னசாமி. இவர்கள் இருவரும் ஆந்திராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்ப்பட்டவர்களாவர்.அப்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லுக்கட்டு மலைக்கிராமத்தை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி ரஞ்சிதம், தாயார் பூங்கொடி, மற்றும் குடும்பத்தினர் வந்து இருந்தனர். இது போல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மலைவாழ் மக்கள் நல வாரிய கமிஷனிடம் ஆஜராகி தங்கள் மனக்குழுழலை கண்ணீருடன் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின் போது ரஞ்சிதம் கூறியதாவது:
 என்னுடைய கணவர் சசிகுமார், ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு ஏற்காட்டுக்கு போவதாக கூறி விட்டு போனார். நாங்கள் கூலி வேலை செய்கிறோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் . ஒருவன் ஆறாம் வகுப்பும் மற்றொருவன் நான்காம் வகுப்பும் படிக்கிறான். என்னுடைய கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட ஆத்தூர் போலீசார் வந்து சொன்னது்ம் அதிர்ச்சியடைந்தோம். சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பார்த்ததும் மேலும் அதிர்ச்சிக்குள்ளானோம்.என்னுடைய கணவரின் முகம் முழுக்க வெந்த நிலையில் இருந்தது. கண்கள் தோண்டியெடுக்கப்பட்டிருந்தன. பற்கள் முழுவதும் உடைந்து போயிருந்தது. கை, கால்களில் எலும்புகள் நொறுங்கியிருந்தன. அவர்களை சித்ரவதை செய்து போலீசார் சுட்டுக்கொன்றிருந்தனர்.
இதே போல சின்னசாமியின் மனைவி மலரும் , தனது கணவர் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சாட்சியம் அளித்தார். மேலும் அவர்கள் கூறுகையில் கணவனை இழந்த நாங்கள் நிற்கதியில் நிற்கிறோம். எங்களது வாழ்வாதாரத்தை தொடர நிலம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதே போல கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சேலம் தான்யா கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த், வெங்கடேசன் மற்றும் சிவா ஆகியோர் ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். விஜயகாந்தின் மனைவி பவித்ரா, சிவாவின் மனைவி ரேகா ஆகியோர், தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் விசாரணையில் கூறியதாவது
 மூன்று மாதங்களுக்கு முன்பு எங்களது கண்வர்கள் இதே போன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்ததே பத்திரிகைகளை பார்த்து தான் தெரிந்து கொண்டோம். இந்த சம்பவத்தில் எங்களுக்கு அரசு எந்த  இழப்பீடும் தரவில்லை.காவல்துறையினரிடம் மரண சான்றிதழ்  கேட்டபோது அது எதுக்கு உங்களுக்கு என்று நக்கலாக கேட்டார்கள். 7 மாதங்கள் கழித்தே மரண சான்றிதழ் தந்தார்கள். இன்னும் காவல்துறையினர் அந்த மரணம் குறித்து முதல் தகவல் அறிக்கை கேட்டும் கொடுக்கவில்லை. இப்போது எங்களது குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது என்று கண்ணீர் மல்க கூறினர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் இது போன்ற தங்கள் கண்ணீர் கதையை கூறி எதிர்கால வாழ்க்கைக்கு அரசு உதவ வேண்டும். என்ற கோரிக்கையை வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை குறித்து தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் துணைத்தலைவர் ரவி தாகூர் நிருபர்களிடம் கூறுகையில் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் பெரும்பான்மையினர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கவும் கோருவோம். தகுதிக்கேற்ப பணிகள் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைகள் செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.  thinaboomi.com

கருத்துகள் இல்லை: