செவ்வாய், 14 ஏப்ரல், 2015

பாமக சிக்குகிறது? போலி சான்றிதழ் விற்பனை 100 கோடி ரூபாய் பாமக மாநில அணி துணை தலைவி சண்முகசுந்தரி அன் கோ!

எட்டாம் வகுப்பு படித்தவருக்கு கூட, எம்.பி.பி.எஸ்., மற்றும் பொறியியல் சான்றிதழ் விற்ற கும்பல், அரசுத் துறைகள் மற்றும் பல பல்கலைக்கழகங்களை திணறடித்துள்ளது. இந்த கும்பல், போலி சான்றிதழ் விற்பனை மூலம், 100 கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த அருண்குமார், அழகிரி மற்றும் மதுரை வாலிபர் கார்த்திகேயன் ஆகியோர், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய, போலி சான்றிதழ்கள் அளித்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சில் செயலர், தட்சிணாமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்ற போலீசில், மார்ச், 25ம் தேதி புகார் அளித்தார்.பா.ம.க., நிர்வாகி: இதுகுறித்து போலீசார் விசாரித்து, கோவையைச் சேர்ந்த, பி.சி.ஏ., பட்டதாரியும், பா.ம.க., மாநில மகளிர் அணி துணைத் தலைவியுமான சண்முகசுந்தரி, அவரது கூட்டாளிகள் அருண்குமார், சேலம், குரங்குசாவடியைச் சேர்ந்த கணேஷ் பிரபுவை கைது செய்தனர்.விசாரணையில், பா.ம.க., நிர்வாகி சண்முகசுந்தரி தலைமையிலான கும்பல், 100 கோடி ரூபாய்க்கு மேல் போலி சான்றிதழ் விற்றது தெரியவந்தது.  வாய் கிழிய பேசும் ராமதாஸ் எங்கே ? எங்கே ? ரெண்டு நாளாக இந்த மனிதரின் சத்தத்தையே காணோம்.
பள்ளி, கல்லுாரி பக்கமே தலைவைத்துக் கூட படுக்காதவர்களுக்கு எல்லாம், 10ம் வகுப்பு முதல், எம்.பி.பி.எஸ்., - பி.எல்., - எம்.எல்., மற்றும் பல்கலை வரையில், பல வகை பட்டப் படிப்புகளுக்கு, போலி சான்றிதழ் விற்றது அம்பலமாகியுள்ளது.இந்த மோசடி கும்பலிடமிருந்து, உ.பி., ஜான்சி, கான்பூர் பல்கலை, லக்னோ மாநில டெக்னிகல் எஜுகேஷன் போர்டு, டில்லி போர்ட் ஆப் சீனியர் செகண்டரி எஜுகேஷன்.டில்லி போர்ட் ஆப் சீனியர் செகண்டரி டெக்னாலஜி, மேகாலயா டெக்னோ குளோபல் சென்டர் என, பள்ளிக்கல்வி, தொழிற்கல்வி, பட்டயப் படிப்புகள், பட்டப் படிப்புகள், தொழிற்கல்விப் படிப்புகள் என,அனைத்து வகை சான்றிதழ்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.போலி சான்றிதழ் விவகாரத்தால் தமிழக அரசுத் துறை அதிகாரிகள், டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரியம், பல்கலை தேர்வுத்துறை, அரசுத் தேர்வுத்துறை, மருத்துவக் கல்வி இயக்குனரகம் என அனைத்து தரப்பிலும், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசுத் துறைகளில் எத்தனை பேர், போலி சான்றிதழ்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர் என தெரியவில்லையே என்று கலக்கம் அடைந்துஉள்ளனர். ஒரு வேளை போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டால், மொத்த துறைக்கும் அவமானமாகி விடும் என்று அதிர்ச்சியில் உள்ளனர்.தடுப்பது எப்படி? இதற்கிடையில், போலி சான்றிதழ்கள் புழக்கத்தைத் தடுக்க, அரசின் பணியாளர் நிர்வாகம், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி அதிகாரிகள், பல்கலை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.எந்த வகையான சான்றிதழ்களை இனி தருவது, 'வாட்டர் மார்க்' மற்றும் ரகசிய முத்திரை இடலாமா, ஆதார் எண், இ-மெயில் ஐ.டி., வாக்காளர் அடையாள அட்டை எண், டிரைவிங் லைசென்ஸ் எண் போன்றவற்றை, இனி சான்றிதழ்களில் பதிவு செய்யலாமா, சான்றிதழ்களுக்கு பதிவு எண் தந்து, அவற்றை அரசுத் துறைகளின் உள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாமா என்று ஆலோசனை செய்து வருகின்றனர். அனைத்து துறை சான்றிதழ்களின் ஒரிஜினல் தன்மையை சரிபார்க்க, பல்கலை, தேர்வுத்துறை மற்றும் கல்வி இயக்குனரகங்களுடன் கூடிய ஆன் - லைன் இணைப்பு ஏற்படுத்தலாம் என்றும் ஆலோசித்துள்ளனர். பணி நியமனங்கள் மற்றும் கல்லுாரி சேர்க்கையிலும் சான்றிதழ்களின் ஒரிஜினல் தன்மையை சரிபார்க்க, 'எக்ஸ் - ரே ரீடிங் ஸ்கேனர்' வைத்தும், சம்பந்தப்பட்ட துறையினரை வைத்தும் ஆன் - லைனில் சரிபார்க்கலாம் என்றும் யோசனை மேற்கொண்டுள்ளனர். மின் வாரியத்தில் போலி சான்றிதழ்? மின் வாரிய சட்டப் பிரிவு ஊழியர்கள், போலி சான்றிதழ் பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை, அண்ணா சாலையில், தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இதில், சட்டப் பிரிவு உள்ளது. இங்கு பணிபுரியும், சில ஊழியர்கள், எல்.எல்.பி., சட்டப் படிப்பு சான்றிதழ்களை போலியாக வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உயர் அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தினால், உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பணியில் சேரும் போது, போலி சான்றிதழ் வழங்குவது கிடையாது. ஆனால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் பெற, பலர், போலி சான்றிதழை பயன்படுத்துகின்றனர். அதன்படி, மின் வாரியத்திலும், ஒரு சில ஊழியர்கள் வழங்கி உள்ளனர். எனவே, அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: