வெள்ளி, 17 ஏப்ரல், 2015

ஜெயலலிதாவுக்கு ஜாமின் மே 12ஆம் தேதி வரை நீட்டிப்பு! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு மே மாதம் 12ஆம் தேதி வரை ஜாமினை நீட்டித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பாலிநரிமன் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஜாமினை நீட்டிக்கக் கோரினார். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா குறுக்கிட்டு, இந்த வழக்கு தொடர்பாக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது. எனவே, ஏப்ரல் 30க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வராது என தெரிவித்தார்.அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மே 12ஆம் தேதி வரை ஜெயலலிதாவின் ஜாமினை நீட்டித்து உத்தரவிட்டது.
இதேபோல் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கும் ஜாமினை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, பெங்களூரு தனி நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நான்கு பேரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் ஜாமின் மனுக்களை, கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு, அக்டோபர், 17ம் தேதி, நான்கு பேருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு ஜாமின் வழங்கியது. பின்னர் டிசம்பரில், ஜாமின் நீட்டிக்கப்பட்டது. 

ஜாமின் மனுக்களை விசாரித்த, உச்ச நீதிமன்றம், இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை, மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்கவும், கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், ஜெயலலிதா தரப்புக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி, மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை, ஜனவரி 2ம் தேதி, நீதிபதி குமாரசாமி துவக்கினார். மார்ச் 11ம் தேதி விசாரணையை முடித்து, தீர்ப்பு தேதியை தள்ளி வைத்தார். 

இந்நிலையில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனத்தை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மனு தாக்கல் செய்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது. இதனால், இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' விசாரணைக்கு செல்கிறது. 

இதனிடையே ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், ஜாமீன் நிறைவடைவதால், தங்களது ஜாமீனை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு  nமுன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: