வியாழன், 16 ஏப்ரல், 2015

ஆ.ராசா : தொலைத்தொடர்பு துறையில் Barti Airtel போன்றவர்களின் சுரண்டலுக்கு நான் தடையாக இருந்தேன்

2 ஜி வழக்கு தொடர்பாக ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு ஆ.ராசா பேட்டி அளித்துள்ளார்.அப்பேட்டியில்,   ‘’1997 முதல் 2007–ம் ஆண்டு வரை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 10 மெகா கெட்ஸ் அளவுக்கு செல்போன் சேவை அலைக்கற்றை வசதியை இலவசமாக பெற்று வந்தன. நான் மத்திய மந்திரியாக இருந்த கால கட்டத்தில் பார்தி ஏர்டேல் நிறுவனர் சுனில் பார்தி மித்தல் இந்திய செல்லூலார் ஆபரேட்டர் சங்க தலைவராக இருந்தார்.நான் மத்திய மந்திரியான பிறகு தொலைத்தொடர்பு சேவை வழங்க, 4.4. மெகா கெட்ஸ் வரை மட்டும் அலைக்கற்றை இலவசமாக பெற புதிய நிறுவனங்கள் முன் வந்தன. இதை பார்தி மித்தலின் நிறுவனம் உள்ளிட்ட பழைய நிறுவனங்கள் விரும்பவில்லை.


புதிய நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை இலவசமாக வழங்காவிட்டால் தொலை தொடர்பு சேவையில் போட்டி இருக்காது என்று இந்திய ஒழுங்கு முறை ஆணைய (டிராய்) பரிந்துரை செய்து இருந்தது. அதை செயல்படுத்தும் எனது முயற்சியை இந்திய செல்லூலார் ஆபரேட்டர்கள் சங்கம் (சி.ஓ.ஏ.ஐ.) எதிர்த்தது.

இந்த பிரச்சனையில், எனது செயல்பாடு குறித்து பல்வேறு அமைச்சகங்களில் இருந்தும் விளக்கம் கேட்டு எனக்கு கடிதங்கள் வந்தன. பார்தி ஏர்டெல் நிறுவனம் சி.ஓ.ஏ.ஐ. தரப்பில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு என் மீது புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தை பிரதமர் அலுவலகம் எனக்கு அனுப்பி தெளிவுபடுத்தும்படி கேட்டது. இதைத்தான் பிரதமர் எனது நடவடிக்கையை ஆதரிக்கவில்லை என்று சிலர் தவறாக புரிந்து கொண்டு சித்தரிக்கிறார்கள்.

2  ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு அதிகாரி மதிப்பிட்டதை பாராளுமன்றத்தின் பொது கணக்கு குழு மற்றும் சி.பி.ஐ. ஏற்கவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக எனது வீட்டிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஆனால், தவறாக வருமானம் வந்ததாக கூறி இதுவரை எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. சி.பி.ஐ. மத்திய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணையிலும் அப்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொலைத்தொடர்பு துறையில் புரட்சி ஏற்படுத்த முயன்றேன். அதற்காக குற்றவாளி போல சித்தரிக்கப்பட்டிருக்கிறேன். தலைமை கணக்கு அதிகாரி, சி.பி.ஐ., மத்திய கண்காணிப்பு ஆணையம், திட்டக்குழு, மத்திய மந்திரிசபை, தொலைத்தொடர்பு ஆணையம், டிராய் போன்ற அமைப்புகளில் நீடிக்கும் முரண்பாடுகளால் வந்த விளைவுதான் 2 ஜி அலைக்கற்றை வழக்கு.

இது விசாரணைக்கு தகுதியான வழக்கு அல்ல. இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன். அதிகாரத்தில் இருந்த செல்வாக்கு மிக்கவர்களை எதிர்த்தேன். தொலைத்தொடர்பு சேவை தொழில் மூலம் ஏகபோகமாக நடந்து கொண்டவர்களையும், இயற்கைவளங்களை சுரண்டியவர்களையும் ஒழிக்க முயன்றேன். அதற்காக பழி வாங்கப்படுகிறேன்.

இதுபற்றி புத்தகமாக எழுதி இருக்கிறேன். விரைவில் அதை வெளியிடுவேன். அதில் மோசடி செய்யும் தனிநபர்கள் யார்? நிறுவனங்கள் எவை என்பதை வெளிப்படுத்துவேன். தொலைத்தொடர்பு துறையின் மேம்பாட்டுக்காக நான் உண்மையாக மேற்கொண்ட முயற்சிகளையும் விளக்குவேன்’’என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: